கம்பம் அருகே சுருளி அருவி அருகே அமைந்துள்ள கோயில் பகுதியில் சிதறி கிடக்கும் நவதானியங்களை உண்ணும் குரங்குகள் (அடுத்த 
தமிழகம்

வீட்டு உணவின் ருசிக்கு அடிமையானதால் பொதுமக்களை தேடி வரும் சுருளிமலை குரங்குகள்: மாறிய உணவுப்பழக்கத்தால் சிக்கல்

செய்திப்பிரிவு

சுருளி அருவிக்கு பொதுமக்கள் செல்ல தடை உத்தரவு தொடர்வதால், வீட்டு உணவின் ருசிக்கு அடிமையாகிவிட்ட குரங்குகள் தற்போது மலையடிவாரப் பகுதிக்கு பொதுமக்களை தேடி வரத் தொடங்கி உள்ளன.

கம்பம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலம் சுருளி அருவி, ஹைவேவிஸ் தூவானம் அணை தண்ணீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் சுருளியில் அருவியாக கொட்டுகிறது. தற்போது அருவிக்குச் செல்வதற்கான தடை தொடர்வதால் ஒரு கி.மீ.க்கு முன்னதாக அமைந்துள்ள கோயில் பகுதியில் வழிபாடு, தர்ப்பணம் போன்றவற்றிற்காக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

அருவி பகுதி மலையில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இவை சுற்றுலாப் பயணிகள் தரும் உணவுகளையும் உண்டு பழகி விட்டது. இதனால் புளியோதரை உள்ளிட்ட உணவுகள், குளிர்பானம், இனிப்பு வகைகள் என்று மனித உணவுகளின் ருசியின் பிடியில் சிக்கிவிட்டன. தற்போது சுருளி அருவிக்கு பயணிகள் அனுமதிக்கப்படாததால், மாறுபட்ட ருசிக்கு பழக்கப்பட்ட இந்த குரங்கள் தற்போது ஒரு கி.மீ. தூரமுள்ள தியானலிங்கேஸ்வரர் கோயில் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளன. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். எனவே இவர்களிடம் இருந்து உணவுகளை வாங்கியும், பறித்தும் தன் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றன.

மேலும் நடைபாதைக் கடைகளில் உள்ள உணவுகள், பழங்கள் போன்றவற்றை திருடியும் சென்று விடுகின்றன. இதனால் சாதுக்களும், கடைக்காரர்களும் கம்பு, கவன் போன்றவற்றுடனே வலம் வருகின்றனர். உணவு கிடைக்காத நேரங்களில் பக்தர்கள் கோயிலில் போட்டிருக்கும் உணவு தானியங்களை உண்ணுகின்றன. சில சமயங்களில் குரங்குகள் உணவு களை தட்டிப்பறிக்கும் போது பக்தர்களுக்கு காயங்கள் ஏற்படுவதால் அச்சமடைந்துள்ளனர்.

சுருளிப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் வரை உணவிற்காக இவை இடம்பெயர்ந்து வருகின்றன. வனத்துறையினர் கூறுகையில், “விலங்குகளை உணவிற்கான இயல்பிலே விட்டுவிட வேண்டும். ஆர்வம் காரணமாக பலர் குரங்குகளுக்கு வழங்கும் குளிர்பானம், இனிப்பு போன்றவற்றினால் தற்போது அதன்மீது குரங்குகளுக்கு அதிக நாட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்திற்குள் ‘தேடி உண்ணும் நிலையில்’ இருந்த குரங்குகள் தற்போது மனிதர்களிடம் பறித்தும், கையேந்தி உண்ணும் நிலைக்கும் மாறிவிட்டன” என்றனர்.

SCROLL FOR NEXT