கடந்த 5 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய் உள்ளிட்டவைகளோடு ரொக்கப் பணத்தையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.100 ரூபாயில் தொடங்கிய இந்தச் ரொக்க சேவை, தற்போது 2,500 ரூபாய் வரைக்கும் உயர்ந்திருக்கிறது.
கடந்த இரு ஆண்டுகளாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட போது, அவை பெரும்பாலும் இல்லத்தரசிகளின் கைகளுக்குப் போகாமல் டாஸ்மாக் கடைகளுக்கேச் சென்றன. எப்போதும் பொங்கல் பண்டிகையின் இரு தினங்களுக்கு முன்னர் இந்த ரொக்கப் பணம் விநியோகிக்கப்பட்டு வந்தது. நடப்பாண்டில், 10 தினங்களுக்கு முன்பாகவே ரொக்கப் பட்டுவாடா தொடங்கி விட்டது.
ரேஷன் கடை மூலம் கொடுத்த ரூ. 2,500 பாதியாவது, தங்கள் கடைக்கு வந்து சேரும் என ஏக எதிர்பார்ப்பில் இருந்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களின் டாஸ்மாக் விற்பனையாளர்கள், 4-ம் தேதி மாலை விற்பனை எப்போதும் போலவே இருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர். 5-ம் தேதி, 6-ம் தேதி என நாட்கள் கடந்தனவே தவிர, விற்பனை வழக்கம் போலவே இருந்தது.
இதுபற்றி பண்ருட்டியை அடுத்த வல்லத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விசாரித்தோம், “அங்க கொடுத்தா இங்க வரும்ன்னு நினைச்சோம். ஆனா 3-ம் தேதி வியாபாரம் 1 லட்சத்து 48 ஆயிரம் ரூபா விற்பனையான நிலையில், 4, 5,6 ஆகிய தேதிகளின் விற்பனை அதைவிட சற்றுக் குறைவாகவே இருந்தது. விற்பனை எதிர்பார்த்தபடி உயரவில்லை. பொங்கல், காணும் பொங்கல் நாட்களில் தான் விற்பனை அதிகரிக்க வாய்ப்புண்டு” குறிஞ்சிப்பாடியை அடுத்த நெத்தனாங்குப்பம் டாஸ்மாக் கடையில் விசாரித்தபோது, “இந்தமுறை பெண்கள் எல்லாரும் உஷாராயிட்டாங்க.
ரேஷன் கடைகளில் அவர்களே முன்நின்று வாங்குறாங்க. வாங்கிய காசையும் கூட கணவன்மார்களின் கண்களில் கூட காட்டவில்லை. எதிர்பார்த்து இருந்த எங்களுக்குதான் ஏமாற்றம்’‘ என்றனர். டாஸ்மாக் கடை ஊழியர் சொல்வது போல, பல நியாய விலைக் கடைகளில் பெண்கள் பொறுப்பாக நின்று, அரசின் இந்த ரொக்கப் பணத்தை வாங்கிச் செல்வதை காண முடிந்தது. ‘நல்ல நாளில் வரும் பணம் நல்லவற்றுக்கு பயன்பட வேண்டும்’. இந்த நினைப்போடு இருக்கும் பெண்கள், அதற்காக தங்கள் வீட்டு ஆண்களுக்கு கிடுக்கிப்பிடி போட்டிருந்தால் அதில் தவறேதும் இல்லை.