ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கோரி அவரது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 31-ம் தேதி அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவதாக ரஜினிகாந்த் கூறினார். பின்னர், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை நீண்ட அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்திவிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரஜினி அறிக்கை வெளியான அன்றே, அவருடைய வீட்டு வாசலில் ரசிகர்கள் ஒன்றுதிரண்டு கோஷங்களை எழுப்பினார்கள். இந்நிலையில் ஜனவரி 10-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அறவழிப் போராட்டத்துக்கு ரஜினி ரசிகர்கள் அழைப்பு விடுத்தனர். இதில் சில ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் அடங்குவர்.
எந்த நிர்வாகியும் இந்த அறவழிப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் அறிவுறுத்தினர். ''நாம் அனைவரும், தலைவரின் முடிவுக்குக் கட்டுப்பட்டு அவரிடமிருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை பொறுமை காக்க வேண்டும். மக்கள் மன்றத்தின் உண்மையான காவலர்கள் யாரும் கலந்துகொள்ளக் கூடாது, மீறிக் கலந்துகொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அறிக்கை வழியாக ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் திட்டமிட்டபடி, ரஜினி ரசிகர்கள் காவல்துறையின் அனுமதியுடன் இன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ராமதாஸ் தலைமையில் இந்த அறவழிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சென்னை வந்துள்ளனர்.
''இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை'', ''வா தலைவா வா'', ''அரசியலுக்கு வாங்க தலைவா'', ''முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் தலைவா'', ''ஆட்சி மாற்றம்... அரசியல் மாற்றம்... மாற்றுவோம் மாற்றுவோம் எல்லாவற்றையும் மாற்றுவோம்'' என்ற கோஷங்களை ரஜினி ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் அரசியலுக்கு வாங்க ரஜினி என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.