தமிழகம்

ரூ.13 கோடியில் சீரமைக்கப்பட்ட நாயக்கர் மஹால், மருதுபாண்டியர் கோட்டை உள்ளிட்ட 8 நினைவுச் சின்னங்களை முதல்வர் திறந்துவைத்தார்: தொல்லியல், கூட்டுறவு துறைகளில் 310 பேருக்கு நியமன ஆணைகள்

செய்திப்பிரிவு

திருமலை நாயக்கர் மஹால், மருதுபாண்டியர் கோட்டை உட்பட 8 வரலாற்றுச் சின்னங்கள் ரூ.13.27 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார். மேலும், தொல்லியல், கூட்டுறவுத் துறைகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள 310 பேருக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி திட்டத்தின்கீழ், சுற்றுலாத் துறை மூலம் புனரமைப்பு, பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள12 நினைவுச் சின்னங்கள் தேர்வுசெய்யப்பட்டன. இதில் முதல்கட்டமாக கட்டபொம்மன் கோட்டை, மனோரா நினைவுச் சின்னம், டச்சுக்கல்லறை ஆகிய 3 நினைவுச் சின்னங்களில் புனரமைப்பு, பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றை முதல்வர் பழனிசாமி கடந்த அக்.5-ம் தேதி திறந்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக, மதுரை மாவட்டம் திருமலை நாயக்கர் மஹால் ரூ.3.61 கோடியிலும், சிவகங்கை மாவட்டம் மருதுபாண்டியர் கோட்டை ரூ.60.31 லட்சத்தில், சிதிலமடைந்த கோட்டைச் சுவர், கூரை ஆகியவை சீரமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மலைக்கோட்டையில் கோட்டை அமைந்துள்ள மலையைச் சுற்றிலும் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியில் ரூ.2.41கோடியில் அடிப்படை வசதிகளுடன் கூடிய பணிகளும், கன்னியாகுமரி மாவட்டம் உதயகிரி கோட்டையில் ரூ.2.30 கோடியில் கோட்டைச் சுவர் பகுதிகள் சீர்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சின்னையன்குளத்தில் ரூ.15.80 லட்சம், பூண்டி அருகர் கோயிலில் ரூ.33.61 லட்சம், தடாகபுரீஸ்வரர் கோயிலில் ரூ.1.85கோடி, கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலில் ரூ.1.99 கோடியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மொத்தம் ரூ.13.27 கோடியில் புனரமைப்பு, பாதுகாப்புப் பணிகள்மேற்கொள்ளப்பட்ட மேற்கண்ட 8 பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களையும் முதல்வர் பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.

தொல்லியல் துறையில் தொல்லியல் அலுவலர் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 17 பேருக்கு பணி நியமனஆணை வழங்கும் அடையாளமாக, 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

வாரிசுகளுக்குப் பணி

சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நேரடிவாரிசான வீ.வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்மு துரையின் மகன் வீ.கணபதி ராஜாவுக்கு மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையிலும், வீ.முருகதேவிக்கு திருநெல்வேலி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை நினைவுச் சின்னத்திலும் சிறப்பு நேர்வாக கருணை அடிப்படையில் காவலர் பணியிடத்துக்கான பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

கூட்டுறவு துறை பணி நியமனம்

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 175 உதவியாளர், தமிழ்நாடு மாநில கூட்டுறவுவேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் 57 உதவியாளர், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனைஇணையத்தில் 53 உதவியாளர் பணியிடங்கள், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தில் 6 இளநிலை உதவியாளர், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தில் 2 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் என மாநில ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 293பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக, 9 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், க.பாண்டியராஜன், தலைமைச் செயலர் கே.சண்முகம், சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை செயலர் விக்ரம் கபூர், தொல்லியல் துறை ஆணையர் த.உதயச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT