தமிழகம்

சென்னையில் டிசம்பர் மாதத்தில் வழக்கத்தைவிட 41 % அதிக மழை: அனைத்து மண்டலங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

செய்திப்பிரிவு

சென்னையில் கடந்த டிசம்பர் மாதத்தில் வழக்கத்தைவிட 41 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ள நிலையில், மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மாநகரம் முழுவதும் 145 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கிணறுகள் மூலம், மாதந்தோறும் நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாத நிலத்தடி நீர்மட்ட ஒப்பீட்டு அறிக்கையை சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும், அதிகபட்சமாக பெருங்குடி மண்டலத்தில் 0.89 மீட்டர், குறைந்தபட்சமாக திரு.வி.க.நகர் மண்டலத்தில் 0.04 மீட்டர் உயரம் வரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 23 செமீ மழை பெய்துள்ளது. வழக்கமாக 16 செமீ மழை பெய்ய வேண்டும். கடந்த மாதம் வழக்கத்தை விட 7 செமீ, அதாவது 41 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி நடவடிக்கை

மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "மழை அதிக அளவில் பெய்தாலும், மாநகராட்சி சார்பில் 8 கோயில் குளங்கள் மற்றும் 210 நீர்நிலைகள், மற்றும் 117 சமுதாய கிணறுகள் ஆகியவை புனரமைக்கப்பட்டதன் காரணமாக, கிடைக்கும் மழைநீர் நிலத்தடி நீராக செறிவூட்டப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் வழக்கத்தை விட மழை குறைவாக பெய்தது. இருப்பினும் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருந்தது. எனவே சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருப்பதற்கு மாநகராட்சியின் நீர்நிலை புனரமைப்பு பணிகள் மற்றும், குடிநீர் வாரியத்துடன் இணைந்துவீடு வீடாக மேற் கொள்ளப்பட்டுவரும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு தொடர்பான ஆய்வுகளும் ஒரு காரணம்" என்றனர்.

SCROLL FOR NEXT