திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் அடுத்த கோளப்பன்சேரியில் அரசு ஆதிதிராவிடர் நல மேனிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில் 105 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். 5 ஆசிரியர்கள் பணிபுரியும் இப்பள்ளியில் 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடம் எந்நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இக்கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை வைக்கின்றனர்.
இதுகுறித்து கோளப்பன்சேரி ஊராட்சிமன்ற தலைவர் விஜய்பாபு, பெற்றோர் - ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது: இப்பள்ளியில் 45 ஆண்டுகளுக்கும் முன்பு கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடம் எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இக்கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும். இல்லையெனில், இக்கட்டிடம் மாணவர்களின் உயிருக்கு மிகவும் அச்சுறுத்தலாக அமையும்.
மேலும், இங்குள்ள பிற வகுப்பறை கட்டிடங்களும் மிகவும் சேதம் அடைந்துள்ளன. சேதமடைந்த பள்ளி கட்டிடத்துக்குள் சமூக விரோதிகள் சிலர் நுழைந்து சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகம், ஆதிதிராவிட நலத் துறை அதிகாரிகள், தாட்கோ நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, மாணவர்களின் நலன் கருதி உடனடியாக இப்பள்ளிக் கட்டிடங்களை சீரமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.