திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி, களக்காடு பகுதிகளில் காட்டுப்பன்றிகள் நெல் வயல்களுக்குள் கூட்டமாக புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. கதிர்வரும் பருவத்தில் பயிர்கள் சேதமடைவது குறித்து விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார த்தில் உள்ள விளைநிலங்களுக்குள் காட்டு விலங்குகள் புகுந்து நாசம் செய்யும் பிரச்சினை முடிவின்றி நீடிக்கிறது. இதனால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக களக்காடு, திருக்குறுங்குடி பகுதிகளில் வாழை தோட்டங்களிலும், வயல்களிலும் காட்டுபன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. தற்போது திருக்குறுங்குடி, களக்காடு பகுதிகளில் நெல் பயிரிட்டுள்ள வயல்களில் அவை புகுந்து நாசம் செய்வது விவசாயிகளை கவலை அடைய வைத்துள்ளது.
களக்காடு, திருக்குறுங்குடி பகுதிகளில் தற்போது 300 ஏக்கருக்குமேல் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது பாலடைக்கும் பருவத்தில் நெற்பயிர்கள் உள்ளன. கதிர்வரும் இந்த பருவத்தில் பயிர்களுக்கு போதுமான தண்ணீரும், சத்தும் கிடைத்து விட்டால் அதிகளவில் மகசூல் கிடைக்கும்.
இன்னும் 40 நாட்களில் அறுவடைக்கு இப்பயிர்கள் தயாராகிவிடும். இதனால் நெற்பயிர்களை கண்மணிபோல் விவசாயிகள் காத்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருக்குறுங்குடி பகுதியில் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வயல்களுக்குள் புகுந்து பயிர்கள் மீது உருண்டு அவற்றை நாசம் செய்து வருகின்றன. வயல் வரப்புகளையும், கால்வாய் கரைகளையும் சேதப்படுத்து கின்றன. இதனால் இப்பகுதி விவசாயிகள் செய்வதறியாது திகைக்கிறார்கள்.
இப்பகுதியில் நெல் பயிரிட்டுள்ள பி. பெரும்படையார் கூறும்போது, ‘‘கடந்த சில நாட்களாகவே காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. நெற்பயிரில் பாலடைக்கும் பருவத்தில் பயிர்கள் சேதமடைந்தால் மகசூல் பாதிக்கும்.
காட்டுப்பன்றிகளால் ஏற்பட்டு ள்ள பாதிப்புகள் குறித்தும், அவற்றை விளைநிலங்களுக்குள் வரவிடாமல் தடுக்க வலியுறுத்தியும் திருக்குறுங்குடி மற்றும் களக்காடு வனத்துறையினருக்கு கடந்த 7-ம் தேதி புகார் மனுக் களை விவசாயிகள் நேரில் அளித்திருந்தோம். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.
களக்காடு வனத்துறையின ருக்கு 7-ம் தேதி புகார் மனுக்களை விவசாயிகள் அளித்திருந்தோம். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.