கரோனா தொற்று குறைவதால் சிறை கைதிகளை உறவினர்கள் காணொலி மூலம் சந்திக்கும் நிலையை மாற்றி வரும் ஜன.14-ம் தேதி முதல் மீண்டும் நேரில் சந்திக்க அனுமதி அளித்து சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து சிறைத்துறை டிஜிபி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
“கோவிட்-19 கரோனா வைரஸ் தொற்று சிறைகளில் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 17/2020 முதல் சிறைவாசிகளுக்கு அவர்களின் உறவினர்களுடனான நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக சிறைகளுக்குள் ஆன்ட்ராய்டு கைப்பேசிகள் வழங்கப்பட்டு, சிறைவாசிகள் அவர்களின் உறவினர்களுடன் வீடியோ கால் மூலம் பேச அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
நேர்காணலை மீள தொடங்கக்கோரி சிறைவாசிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையும், கரோனா பரவலின் தீவிரம் படிப்படியாக குறைந்து வருவதையும், மாநிலத்தில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதையும், சிறைவாசிகளின் நலனை கருத்தில் கொண்டும், சிறைவாசிகளுக்கு அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனான நேர்காணலை 14.01.2021 முதல் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மீள தொடங்கலாம் என சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப்பணிகள் துறையால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறைவாசிகளின் நேர்காணலின் போது பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைகளை ((Standard Operating Procedure) காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநர் சுனில் குமார் சிங்கால் அனைத்து சிறை கண்காணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, சிறைவாசிகளை நேர்காணல் செய்ய விரும்பும் பார்வையாளர்கள் “ e-Prisons Visitors Management System ” அல்லது அந்தந்த சிறைககளுக்கென கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன்னர் முன்பதிவு செய்ய வேண்டும் மற்றும் நேர்காணலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்திற்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு முன்னதாக சிறைக்கு வருகை தர வேண்டும்.
நேர்காணலின்போது ஒரு சிறைவாசியை ஒரு பார்வையாளர் மட்டுமே நேர்காணல் செய்ய அனுமதிக்கப்படுவார். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து ஏனைய நாட்களில் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை நேர்காணல் தலா 15 நிமிடங்கள் அனுமதிக்கப்படும். மாதத்திற்கு ஒரு குடும்ப நேர்காணல் அனுமதிக்கப்படும். உடல் வெப்பநிலை சோதனை, கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பிறகு பார்வையாளர்கள் முகக்கவசத்துடன் சமூக இடைவெளியை கடைபிடித்து நேர்காணல் செய்திட அனுமதிக்கப்படுவர்.
மத்தியசிறை-2 புழல், மத்தியசிறை, கோவை மற்றும் மதுரையில் நாளொன்றுக்கு அதிகபட்சம் 150 பார்வையாளர்களும், மற்ற மத்தியசிறைகளில் 100/75 பார்வையாளர்களும், பெண்களுக்கான தனிச்சிறைகளில் 25 பார்வையாளர்களும் நேர்காணல் செய்ய அனுமதிக்கப்படுவர். கோவிட்-19 கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு நேர்காணலின்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள், நேர்காணல் மனுக்கள்/ உறுதிப்படிவம் ஆகியவற்றை சிறைத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து www.prisons.tn.gov.in பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் நேர்காணல் மனுக்கள் பார்வையாளர்கள் அறையின் நுழைவாயிலில் இலவசமாக வழங்கப்படும். கீழ்கண்ட தொலைபேசி எண்கள் மூலம் நேர்காணலுக்கான முன்பதிவை காலை 9 மணி முதல் மாலை 6 மணிக்குள் செய்து கொள்ளலாம்.
மத்தியசிறை.1, புழல் 09345474957
மத்தியசிறை.2, புழல் 09790798043
மத்தியசிறை, வேலூர் 0416-2900013
மத்தியசிறை, கடலூர் 09488588512
மத்தியசிறை, திருச்சி 0431-2333213
மத்தியசிறை, சேலம் 0427-2405163
மத்தியசிறை, கோயம்புத்தூர் 0422-2307218
மத்தியசிறை, மதுரை 0452-2361125
மத்தியசிறை, பாளையங்கோட்டை 0462-2531845
பெண்கள் தனிச்சிறை, புழல் 09345458296
பெண்கள் தனிச்சிறை, வேலூர் 0416-2900014
பெண்கள் தனிச்சிறை, திருச்சி 09345467960
பெண்கள் தனிச்சிறை, மதுரை 0452-2361132
பெண்கள் தனிச்சிறை, கோயம்புத்தூர் 0422-2301819 “
இவ்வாறு சிறைதுறை டிஜிபி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.