சென்னையில் புதிய குடும்ப அட்டை தயாரானதும் செல்போனுக்கு வரும் குறுந்தகவலுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு கேட்டு வருவோர்களால் ரேசன் கடை பணியாளர்கள் புதிய பிரச்சினையை சந்தித்து வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சீனி, முழு கரும்பு வழங்கப்படுகிறது. ரேசன் கடைகளில் ஜன. 4 முதல் தினமும் 200 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதற்காக அரிசு அட்டைதாரர்களுக்கு முன்கூட்டியே அவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க வேண்டிய நாள், நேரத்தை குறிப்பிட்டு டோக்கன் வழங்கப்பட்டது. அந்த டோக்கன் அடிப்படையில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் வாங்காதவர்களுக்கு ஜன. 13-ல் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 8.86 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிதாக 4 ஆயிரம் பேருக்கு அரிசி கார்டு வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை ஒதுக்கப்படவில்லை. இருப்பினும் குடும்ப அட்டை தயாரானதும், அவர்களின் செல்போன் எண்ணுக்கு உங்கள் குடும்ப அட்டை தயாராக இருப்பதாகவும், ரேசன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கிக்கொள்ளுமாறும் குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.
அவ்வாறு குறுந்தகவல் வந்ததும் புதிய குடும்ப அட்டைதாரர்கள் ரேசன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பு கேட்கின்றனர். அவர்களுக்கான ஒதுக்கீடு இன்னும் வரவில்லை என பணியாளர்கள் கூறினால் பலர் அதை கேட்காமல் சண்டைபோடுகின்றனர். இதனால் ரேசன் கடை பணியாளர்கள் புதிய பிரச்சினையை சந்தித்து வருகின்றனர்.
கிராம நிர்வாக அலுவலகம் வழியாக வழங்கப்பட்டு வந்த இலவச வேஷ்டி, சேலை சில ஆண்டுகளாக ரேசன் கடைகள் வழியாக வழங்கப்படுகிறது.
இந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்பட்டது. 60 சதவீத கார்டுகளுக்கு மட்டுமே வேஷ்டி, சேலை வழங்கப்பட்டுள்ளது.
அதுவும் முதல் நாள் வந்தவர்களுக்கு வேஷ்டி, சேலையும், இரண்டாவது நாள் வந்தவர்களுக்கு எதாவது ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 40 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு வேஷ்டி, சேலை கிடைக்கவில்லை.
இது குறித்து மதுரை வழங்கல் அலுவலர் முருகேஸ்வரி கூறுகையில், சென்னையில் குடும்ப அட்டை தயாரானதும் அது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும். இருப்பினும் புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை இனிமேல் தான் ஒதுக்கீடு செய்யப்படும்.
பழைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத் தொகுப்பு ஒதுக்கப்பட்டு கொடுக்கப்பட்டு வருகிறது. விடுபட்டவர்களுக்கு ஜன. 13-ல் கொடுக்கப்படும் என்றார்.