கிரண்பேடியை கண்டித்து இரண்டாம் நாளாக இன்றும் புதுச்சேரியில் போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு வந்த திருமாவளவன், கிரண்பேடி நடுநிலைவாதி இல்லை என்பதை தெரியப்படுத்தவே இந்த போராட்டம் என்று தெரிவித்தார்.
மக்கள் நலத்திட்டங்களுக்கு தடை ஏற்படுத்தி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுவதாகக்கூறி காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் சார்பில் மறைமலை அடிகள் சாலை அண்ணா சிலை அருகே 4 நாள் தொடர் போராட்டம் நேற்று (ஜன. 08) தொடங்கியது.
போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் பங்கேற்றனர். போராட்ட களத்திலேயே முதல் நாளான நேற்று மதியம், இரவு உணவு சாப்பிட்டு அங்கேயே படுத்து உறங்கி விடிய, விடிய போராட்டத்தை தொடர்ந்தனர்.
இன்று (ஜன. 09) 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. போராட்ட களத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் புதுவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து காங்கிரஸ், கூட்டணி கட்சி தொண்டர்கள் கூடியிருந்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. ஆகியோர் போராட்ட களத்துக்கு வந்தனர்.
போராட்டத்தை வாழ்த்தி தொல்.திருமாவளவன் பேசியதாவது:
"ஆளுநர், துணை நிலை ஆளுநர் பதவிகளே தேவையில்லை என்பதே எங்கள் கூட்டணி கட்சிகளின் எண்ணம். ஆட்சி நிர்வாகத்துக்கு முதல்வர் இருக்கும்போது ஆளுநர், துணைநிலை ஆளுநர் எதற்கு? புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்படுகிறது. அரசு எடுக்கும் முடிவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் நெருக்கடி தருகிறார். இது முதல்வருக்கும் மக்களுக்கும் இடையில் பிரச்சினையை உருவாக்குகிறது. ஆளுநருக்கு இதனால் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த போராட்டத்தால் ஆளுநரை மாற்றிவிடுவார்கள் என்பது நிச்சயமில்லை.
ஊழலுக்கு எதிராக டெல்லியில் அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தில் கிரண்பேடி பங்கேற்றார். தன்னை கட்சி சார்பற்றவர் என கூறிக்கொண்ட கிரண்பேடியால் எப்படி பாஜகவில் இணைய முடிந்தது? கிரண்பேடியின் நேர்மை உண்மையா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அவர் நேர்மையானவர், அப்பழுக்கற்றவர், நடுநிலைவாதி இல்லை. இதை தெரியப்படுத்தவே இந்த போராட்டம்.
பாஜக இந்துக்களுக்கான கட்சி என சொல்வார்கள். ஆனால், காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளில் பெரும்பான்மையாக இந்துக்கள் உள்ளனர். விவசாயிகளில் பெரும்பாலனவர்கள் இந்துக்கள்தான். மத்திய மோடி அரசு கொண்டுவந்த விவசாயிகள் சட்டம், நீட், ஜிஎஸ்டி போன்றவற்றில் பாதிக்கப்படுபவர்களும் இந்துக்கள்தான்".
இவ்வாறு அவர் பேசினார்.