தமிழகம்

காங்கிரஸ் கட்சியின் அடையாளத்தை அழிக்க மத்திய திரைப்பட பிரிவு இடத்தை அம்பானிக்கு தாரை வார்ப்பதா?- குமரி அனந்தன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மத்திய திரைப்பட பிரிவுக்கு சொந்தமான இடத்தை தொழிலதிபர் அம்பானிக்கு தாரை வார்க்கமத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், காந்தி பேரவை தலைவருமான குமரிஅனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஆசியாவிலேயே காட்சி ஊடகங்களின் தாய் நிறுவனமாக 1948-ல்நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் மத்திய திரைப்படப் பிரிவு உருவாக்கப்பட்டது. 75 ஆண்டுகளை நெருங்கும் இந்நிறுவனம் மும்பையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் இயக்கம் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரப் போராட்ட காட்சிகள், உப்பு சத்தியாகிரகம், தண்டி யாத்திரை என்று மகாத்மா காந்தியும், நேருவும் நடத்திய போராட்ட காட்சிகள், கோப்புகளை மத்திய திரைப்பட பிரிவு பாதுகாத்து வருகிறது.

விடுதலைக்குப் பிறகு நேரு உருவாக்கிய நவீன இந்தியாவின் அடிப்படை திட்டங்களான அணைகள், தொழிற்சாலைகள், நேரு, இந்திரா, ராஜீவ் காந்தியின் திட்டங்கள், காங்கிரஸ் பேரியக்க செயல்பாடுகள் போன்ற காட்சிகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு, அவற்றை மத்திய திரைப்படப் பிரிவு பாதுகாத்து வருகிறது.

அடையாளத்தை அழிப்பதா?

இத்தகைய சிறப்பு வாய்ந்த மத்திய திரைப்படப் பிரிவை, தேசியதிரைப்பட வளர்ச்சிக் கழகம் என்ற பொதுத்துறை நிறுவனத்துடன் இணைக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நேருவால் மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட மத்திய திரைப்படப் பிரிவின் இடத்தை தொழிலதிபர் அம்பானிக்கு தாரை வார்க்க மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் அடையாளத்தை அழிக்க பல்வேறு திட்டங்களை பாஜக செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் மத்திய திரைப்பட பிரிவு.

இவ்வாறு குமரிஅனந்தன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT