பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும்ரூ. 2,500 ரொக்கம் வழங்கப்படும் ரேஷன் கடைகளில் ஆளுங்கட்சியினரின் பேனர்கள், துண்டு பிரசுரங்கள், கட்-அவுட்டுகள் வைக்கக்கூடாது என்றும் ஆனால் பொங்கல் பரிசு பைகளில் முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வரின் படங்கள் இடம்பெறலாம் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 ரொக்கம் மற்றும்பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாகத்தான் விநியோகிக்க வேண்டும். அதில் கட்சித் தலைவர்களின் படங்களும் இடம்பெறக் கூடாது என்று திமுக தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம்
இந்நிலையில் பொங்கல் பரிசுத்தொகை மற்றும் பொருட்கள் வழங்கப்படும் ரேஷன் கடைகளில் ஆளுங்கட்சியினர் பேனர்கள், கட்-அவுட்டுகள், அலங்கார பந்தல்கள் அமைத்தும், இரட்டை இலை சின்னத்துடன் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், ரூ.2,500ரொக்கம் ஆளுங்கட்சி சார்பில் வழங்கப்படுவது போல ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி சுயவிளம்பரம் தேடி வருவதாகக் கூறி திமுக சார்பில் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று தலைமைநீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ‘‘நலத்திட்ட பணிகளில் சுயவிளம்பரம் தேடக்கூடாது எனநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தை மீறி தற்போதுஅதிமுகவினர் செயல்பட்டு வருகின்றனர்" எனக்கூறி வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்தார்.
அப்போது குறுக்கிட்ட அரசுதலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், "பைகளில் முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வரின் படங்கள் இடம்பெறக் கூடாது எனக்கூற முடியாது. தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சியின் சாதனைகளை விளக்கி பேனர்கள், துண்டுபிரசுரங்கள் விநியோகிப்பது வழக்கமான ஒன்றுதான்" என வாதிட்டார்.
அலங்கார வளைவு கூடாது
இருதரப்பு வாதங்களையும்கேட்ட நீதிபதிகள், பொங்கல் பரிசு வழங்கப்படும் ரேஷன் கடைகளில் அல்லது கடைகளுக்கு முன்பாக பேனர்கள், கட்-அவுட்டுகள், அலங்கார வளைவுகள் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்திருந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கக் கூடாது. அதேநேரம் பைகளில் தமிழக முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வரின் படங்கள் இடம்பெறலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.