இந்தியாவில் கரோனா தொற்றுக்கான தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை அறிந்துகொள்ள நேற்றுசென்னை வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், சென்னை அப்போலோ மருத்துவமனையின் தடுப்பூசி மையத்தில் கரோனா தொற்று தடுப்பூசி ஒத்திகையை பார்வையிட்டார்.
அப்போது தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி, நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர். உயிரை காப்பாற்றும் சேவையில் ஈடுபட்டுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வாழ்த்துகளை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி கூறும்போது, “அப்போலோ மருத்துவமனை கரோனா தடுப்பூசி ஒத்திகையில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தொற்றில் இருந்துமக்களை பாதுகாக்க அரசுடன் இணைந்து செயல்பட இருக்கிறோம். கரோனா தொற்றுக்கு எதிரான இந்த போராட்டத்தில் பங்கேற்று இந்தியாவை பாதுகாப்பதில் எங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. அரசுடன் இணைந்து கரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி கிடைத்துள்ளது. கோவின் செயலி பதிவு செய்தவர்களை சரிபார்த்தல் தொடங்கி தடுப்பூசிக்குப்பின் 30 நிமிட கண்காணிப்பு வரை அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன” என்றார்.