வன்னியர்களுக்கு 2 சதவீதம் தனி இடஒதுக்கீடு அளிக்கக் கோரி டிசம்பர் 23-ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக படையாட்சியார் பேரவை அறிவித்து உள்ளது.
இதுகுறித்து பேரவையின் நிறுவனத் தலைவர் எஸ்.எஸ்.ஆர்.ராமதாஸ், மாநில தலைவர் எம்.பி.காந்தி ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
வன்னியர் சமுதாயத்துக்கு தனி இடஒதுக்கீடு பெற்றுத் தருகிறேன் என கூறி, வன்னியர் மக்களை போராட்டத்தில் களம் இறக்கிய பாமக நிறுவனர் ராமதாஸ், அதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
பாமகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி, 5 ஆண்டுகள் மத்திய அமைச்சராகவும், 6 ஆண்டுகள் ராஜ்யசபா எம்.பி.யாகவும் பதவி வகித்தார். அவருக்கு வன்னியர் சமுதாயத்தின் உழைப்பால்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஒருமுறை கூட நாடாளுமன்றத்தில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று பேசவில்லை.
திராவிட கட்சிகளுடன் பாமக கூட்டு வைக்கும்போது ஒருமுறை கூட வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கிடைத்தால்தான் கூட்டணி வைப்போம் என ராமதாஸ் கூறியதில்லை. எனவே, இனியும் ராமதாஸை நம்பி பயனில்லை.
தமிழகத்தில் உள்ள 2.5 கோடி வன்னியர்களுக்கு 2 சதவீத தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளோம். இக்கோரிக்கையை வலியுறுத்தி டிசம்பர் 23-ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.