சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடியில் மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை. 
தமிழகம்

சிங்கம்புணரி அருகே கொட்டும் மழையில் மஞ்சுவிரட்டுக் காளைகளை அடக்கிய காளையர்கள்

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடந்த இளவட்ட மஞ்சு விரட்டில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் காளையர்கள் பங்கேற்றுக் காளைகளை அடக்கினர்.

சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடி சிறைமீட்ட அய்யனார், படைத்தலைவி அம்மன் கோயில் பொங்கல் விழாவின் முன்னோட்டமாக மார்கழி மாதக் கடைசி வெள்ளிக்கிழமை அன்று இளவட்ட மஞ்சுவிரட்டு நடப்பது வழக்கம். அதன்படி இன்று மஞ்சுவிரட்டு நடந்தது.

இதையொட்டி ஊர் மந்தையில் இருந்து கிராமத்தார்கள் ஊர்வலமாகத் தொழுவிற்கு வந்தனர். அங்கு கோயில் மாட்டிற்குச் சிறப்பு மரியாதை செய்தனர். பிறகு மற்ற மஞ்சுவிரட்டு மாடுகளுக்கு வேட்டி, துண்டுகள் வழங்கப்பட்டன.

அதன்பிறகு கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டு, தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்க்கப்பட்டன. இதில் சிங்கம்புணரி, காளாப்பூர், மேலூர், நத்தம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த காளைகள் பங்கேற்றன. பலத்த மழையிலும் சுற்றுப்பகுதியைச் சோ்ந்த ஏராளமான இளைஞா்கள் ஆர்வமாகக் காளைகளைப் பிடிக்க முயன்றனர்.

இதில் சில காளைகள் பிடிபட்டன. பெரும்பாலான காளைகள் பிடிபடாமல் தப்பின. மழை பெய்ததால் மைதானம் முழுவதும் சேறும், சகதியுமாக இருந்தது. மாடு முட்டியதில் 10க்கும் மேற்பட்டோருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன.

SCROLL FOR NEXT