மக்களை அவமதித்ததாகக் குற்றம் சாட்டி கிரண்பேடி, நாராயணசாமிக்கு ரூ.201-ஐ பொங்கல் பரிசாக சமூக அமைப்பினர் தங்கள் சொந்தப் பணத்தை இன்று அனுப்பிவைத்து நூதனப் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரியில் பொங்கல் பரிசாக ரூ.200-ஐ சிவப்பு ரேஷன் அட்டைக்கு மட்டும் வழங்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அரசுக்கு ஒப்புதல் அளித்தார். தமிழகத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ரூ.200 கொடுத்து புதுச்சேரி மக்களை அவமதித்துவிட்டதாக, புதுச்சேரி சமூக அமைப்புகள் குற்றம் சாட்டின.
இதையடுத்து, புதுவை சமூக நல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் பொங்கல் பரிசாக ரூ.201 மணியார்டர் அனுப்பும் போராட்டம் இன்று (ஜன. 08) நடைபெற்றது. புதுச்சேரி அரசு ரூ.200 தந்து மக்களை அவமதித்துள்ளதாகக் கூறி, அவர்களின் பரிசை விட ரூ.1 கூடுதலாகச் சேர்த்து முதல்வருக்கும், ஆளுநருக்கும் பொங்கல் பரிசை சுமார் 28 பேர் வரை அனுப்பி மக்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
முதலியார்பேட்டை கிளை அஞ்சலகத்தில் மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் சுகுமாரன், ஆம் ஆத்மி கட்சி மாநிலத் தலைவர் ரவி சீனிவாசன், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், தமிழர் களம் அழகர், இயற்கை கலாச்சார புரட்சி இயக்கம் பிராங்ளின்பிரான்சுவா, திராவிடர் விடுதலைக் கழகம் லோகு அய்யப்பன், புதுவை தமிழ் நெஞ்சன், சரஸ்வதி வைத்தியநாதன், அமுதவேந்தன், சண்முக கார்த்திக், பைரவி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இதுபற்றி, பாரதிதாசன் பேரனும், புதுச்சேரி சமுக நல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான கவிஞர் புதுவை கோ.செல்வம் கூறுகையில், "தமிழ்நாடு அரசு தருவதுபோல் ரூ.2,500 மற்றும் பொங்கல் பொருட்கள் அரசு உடனடியாகத் தர வேண்டும். தமிழகத்தைப் போல் அனைத்து ரேஷன் கார்டுக்கும் பொங்கல் பரிசு தரவேண்டும் என்று மக்களின் மனநிலையை விளக்கவே இப்போராட்டம் நடத்தினோம்.
முதலில் சிவப்பு குடும்ப அட்டை உள்ளவர்கள் பற்றிய கணக்கெடுப்பை உடனே புதுச்சேரி மாநிலத்தில் தொடங்க வேண்டும். ஏனெனில், வசதியான பலரும் இந்த அட்டையை வைத்துள்ளனர். அடுத்தகட்டமாக, மோசமான சாலைகளைச் சீரமைக்கக் கோரி போராட்டம் நடத்த உள்ளோம்" என்று தெரிவித்தார்.