கரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை முகாம். 
தமிழகம்

கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்; திருச்சியில் 5 இடங்களில் நடைபெறுகிறது

ஜெ.ஞானசேகர்

கரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை முகாம் திருச்சி மாவட்டத்தில் 5 இடங்களில் இன்று நடைபெறுகிறது.

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த 3-ம் தேதி அனுமதி வழங்கியதையடுத்து, இவை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

இந்தத் தடுப்பூசிகளை மக்களுக்கு இடுவதற்கு முன், இதில் நேரிடும் நடைமுறைச் சிக்கல்களைக் களைய, நாடு முழுவதும் ஒத்திகை முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதன் முதல்கட்ட ஒத்திகை கடந்த 2-ம் தேதி நடைபெற்ற நிலையில், 2-ம் கட்ட ஒத்திகை இன்று (ஜன.08) நடைபெறுகிறது.

இதன்படி, திருச்சி மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை முகாம் இன்று நடைபெறுகிறது.

மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் ஒத்திகை முகாமைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, செய்தியாளர்களிடம் கூறுகையில், "திருச்சி மாவட்டத்தில் மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனை, மணப்பாறை அரசு மருத்துவமனை, ராமலிங்க நகர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இனாம்குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் கரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை முகாம் இன்று நடைபெறுகிறது. ஒவ்வொரு இடத்திலும் 20 முதல் 25 பேருக்கு ஒத்திகை பார்க்கப்படுகிறது.

கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு முதலில் கரோனா தடுப்பூசி போடப்படும். திருச்சி மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் 12 ஆயிரம் பேர் உட்பட மொத்தம் 24 ஆயிரம் முன்களப் பணியாளர்களில், 60 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்துள்ளனர். அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வந்தபிறகு பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடப்படும்" என்றார்.

மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் எட்வினா, அறுவை சிகிச்சை துறைத் தலைவர் ஏகநாதன், மருத்துவர் சதீஸ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT