இன்னும் சில நாட்களில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக கரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று (ஜன. 08) தொடங்கியது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகையை ஆய்வு செய்தார். அப்போது, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதன்பின்னர், மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"பிரதமர் சார்பாக தமிழக மக்களுக்கு வணக்கங்களை கூறிக்கொள்கிறேன். கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட முன்கள பணியாளர்களுக்கு நன்றி. கடந்தாண்டு இதே நேரத்தில் உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலுக்கேற்ப முதல் நாடாக கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நிபுணர்களுடன் மத்திய அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
கரோனா தடுப்புப் பணியில் மத்திய அரசு, மாநில அரசுகள், மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள், மக்கள், சுகாதாரப் பணியாளர்கள், விஞ்ஞானிகள் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர். தற்போது இந்தியா உலகத்திலேயே அதிக குணமடையும் விகிதம், குறைவான இறப்பு விகிதத்தையும் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒரு கோடிக்கும் மேலானோர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
ஒரு கரோனா பரிசோதனை மையத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது நாடு முழுவதும் 2,300 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. பிபிஇ கவசங்கள், வெண்டிலேட்டர், மருந்துகள் என அனைத்துக்கும் பற்றாக்குறை ஏற்படாத நிலை உள்ளது.
குறைவான காலத்தில் தடுப்பு மருந்து செயல்பாட்டிலும் இந்தியா சிறப்பான பணியை மேற்கொண்டுள்ளது. அவசர கால பயன்பாட்டுக்காக 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
விரைவில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், தொற்று பாதிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளோர், முதியவர்கள் ஆகியோருக்கும், அடுத்தக்கட்டமாக இன்னும் சில நாட்களில் பொதுமக்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் சீராக நடைபெற்று வருகிறது. மருத்துவ நிபுணர் குழுவின் அறிவுறுத்தலின்படி கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.
தொழில்நுட்ப வசதிகளை சிறப்பாக பயன்படுத்தி தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.