தமிழகம்

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும்: விஜயதாரணி எம்எல்ஏ வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

திருச்செங்கோடு முன்னாள் டிஎஸ்பி விஷ்ணுபிரியா கொலை செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மகளிரணி மாநிலத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான விஜயதாரணி தெரிவித்தார்.

கடலூரில் உள்ள விஷ்ணு பிரியாவின் இல்லத்துக்கு நேற்று சென்ற விஜயதாரணி, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. பெண்களுக்குப் போதிய பாதுகாப்பில்லை.

நேர்மையான ஒரு பெண் அதிகாரி கோழைத்தனமாக தற்கொலை செய்யமாட்டார். டிஎஸ்பி விஷ்ணுபிரியா தன் கைப்பட எழுதியதாகக் கூறப்படும் 9 பக்கக் கடிதத்தை படித்த வரையில், ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் அதை ஆய்வு செய்ததில், அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. அவர் தூக்கிட்டுக் கொண்டதற்கான ஆதாரங்களும் இல்லை. எனவே அவர் கொலை செய்யப்பட்டு, தூக்கு மாட்டியிருப்பதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளது.

அவர் பயன்படுத்திய லேப்டாப் மற்றும் செல்போன் உள்ளிட்டவை இதுவரை நீதிமன்றத்தில் சமர்ப் பிக்கப்படவில்லை.

எனவே விஷ்ணுபிரியா வழக்கு குறித்த சாட்சியங்கள் அழிக்கப்படுவது தெளிவாக தெரிகிறது. விஷ்ணுபிரியாவின் மேலதிகாரிகளின் அழுத்தத் தால் அவர் கொலை செய்யப் பட்டிருக்கக் கூடும்.

இந்த நிலையில் விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிசிஐடியோ அல்லது சிபிஐயோ விசாரித்தாலும், அது உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெற்றால்தான் உண்மை வெளிவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று கடலூர் வந்த அக்கட்சியைச் சேர்ந்த யுவராஜ், ‘விஷ்ணுபிரியா தற்கொலை குறித்து அவரது பெற்றோர்களும், குடியிருப்புக்கு அருகில் வசிப்பவர்களும் அளிக்கும் தகவல்கள் காவல் துறை மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்’ என்றார்.

SCROLL FOR NEXT