ராணிப்பேட்டையில் தனியார் திருமண மண்டபத் தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன். 
தமிழகம்

சட்டம் - ஒழுங்கு, குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறையினர் கண்ணாடியை போன்று பிரதிபலிப்பார்கள்: ராணிப்பேட்டை எஸ்பி மயில்வாகன் தகவல்

வ.செந்தில்குமார்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு, குற்றச் செயல்களில் ஈடுபட்ட சுமார் 200 நபர்களின் விவரங்களை காவல் துறையினர் ஹிஸ்டரி ஷீட் (வரலாற்று தாள்) என்ற பெயரில் தயாரித்து பராமரித்து வருகின்றனர். ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் இந்தப் பட்டியலில் உள்ளவர்களை அவர்களின் நடத்தைகளை காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

சமூகத்தில் சட்டம் -ஒழுங்கை பாதிக்கும் வகையில் செயல்படும் நபர் மீது இரண்டு வழக்குகளுக்கு மேல் இருந்தால், அவரை காவல் நிலையத்தின் ரவுடிகள் பட்டியலில் சேர்க்க முடியும். திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர் இரண்டு வழக்குகளுக்கு மேல் தண்டனை பெற்றிருந்தால், அவரை கேடிகள் பட்டியலில் சேர்க்கப்படும். பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு இரண்டு வழக்குகளுக்கு மேல் பதிவான நபர்கள் இந்தப் பட்டியலில் சேர்த்து காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் இரவு, பகல் நேரங்களில் ரோந்து செல்லும் காவலர்கள் ஹிஸ்டரி ஷீட்டில் இடம்பெற்றுள்ள நபர்களை கண்காணித்து வருகின்றனர். ரவுடிகள் மற்றும் கேடிகளின் வழக்கு விவரங்களை சேகரிப்பதுடன் அந்த விவரங்களையும் பராமரித்து வருகின்றனர்.

திருந்தி வாழ அறிவுரை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஹிஸ்டரி ஷீட்டில் இடம் பெற்றுள்ள நபர்களை ஒரே இடத்தில் வரவழைத்து ஆலோசனை வழங்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உட்கோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், ‘சட்ட விரோத செயல்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று அறிவுரைகளை வழங்கினார்.

இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஹிஸ்டரி ஷீட் பட்டியலில் இடம் பெற்ற நபர்களை வரவழைத்து அவர்களை திருந்திவாழ வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அதை செய்துகொடுக்கவும் ஏற்பாடு செய்யப்படும். உண்மையாகவே திருந்தி வாழும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கண்காணிப் புப் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டத்தில் பங்கேற்ற பலர் தங்களை இந்த பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அது தொடர் பாக மனுக்கள் அளிக்குமாறு கூறியுள்ளோம். சிலர் திருந்தி வாழ்வதாகக்கூறி வெளியில் சென்ற பிறகு மீண்டும் அதே சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அதுபோன்ற நபர்களை காவல் துறையினர் கண்ணாடியை போன்று பிரதிபலிப்பார்கள்.

நீங்கள் எப்படி காவல் துறையினரை பார்க்கிறீர்களோ அதை நாங்கள் உங்களிடம் பிரதிபலிப்போம் என்பதையும் எடுத்துக்கூறினோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT