நான்கு வயது சிறுமியின் கண்ணில் மாட்டிக் கொண்ட மீன் பிடிக்கும் தூண்டில் முள்ளை மதுரை அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி, அக்குழந்தையின் பார்வையை காப்பாற்றி அசத்தியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கோமாலிப்பட்டியை சேர்ந்த நான்கு வயது சிறுமி தீர்க்கதர்சினி. வீட்டிற்குள் அருகே விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக குழந்தையின் இடது கண்ணில் மீன் பிடிக்கும் தூண்டில் முள் குத்தி மாட்டிக் கொண்டது.
அதை கண்ணில் இருந்து எடுக்க முடியாமல் குழந்தை வலியால் துடித்துள்ளது. பதட்டமடைந்த பெற்றோர், குழந்தையை சிகிச்சைக்காக சிகவங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை கண் மருத்துவத்துறை பேராசிரியர் விஜயசண்முகம், மயக்கவில்துறை மருத்துவர் பேராசிரியர் செல்வக்குமார் ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர்.
இதில், குழந்தையின் இடதுகண்ணில் மிக ஆபத்தானநிலையில் மீன்பிடிக்கும் தூண்டில் முள் சிக்கியிருந்ததை அறிந்தனர். உடனே தேவையான சிறப்பு சிகிச்சைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக குழந்தையின் கண்ணில் சிக்கியிருந்த தூண்டில் முள்ளை வெற்றிகரமாக அகற்றி அக்குழந்தையின் பார்வை இழப்பை தடுத்தனர்.
தற்போது குழந்தை விரைவாக குணமடைந்து வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்யும்நிலையில் உள்ளது. சரியான நேரத்தில் தாமதிக்காமல் சிகிச்சை செய்து பார்வை இழப்பை தடுத்து குழந்தையின் எதிர்காலத்தை காப்பாற்றிய மருத்துவக்குழுவினருக்கு அதன் பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்தெரிவித்தனர். மருத்துவக்குழுவினரை டீன் சங்குமணி பாராட்டினார்.