தமிழகம்

மாற்றுத்திறனாளிகள் பிரச்சினை திமுக ஆட்சியில் சரி செய்யப்படும்: கனிமொழி எம்.பி. பேச்சு

எஸ்.கோமதி விநாயகம்

மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகள் அடுத்து வரும் திமுக ஆட்சியில் சரி செய்து தருவோம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

கயத்தாறு அருகே சுப்பிரமணியபுரம், மானங்காத்தான், கழுகுமலை, கோவில்பட்டி அருகே இடைசெவல், ராஜிவ் நகர் ஆகிய இடங்களில் திமுக சார்பில் அதிமுக நிராகரிப்போம் என்ற மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது.

வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில், மக்களைவை உறுப்பினர் கனிமொழி பேசும்போது, 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிமுக, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து தருவது கிடையாது. நிச்சயமாக 3 மாதங்களில் தமிழகத்தில் திமுக ஆட்சி உருவாகும்.

கரோனா காலத்திலும் தமிழகத்துக்கு முதலீடுகளைக் கொண்டு வந்தேன் என முதல்வர் தெரிவிக்கிறார். ஆனால், யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. அரசு வீடுகள் பராமரிக்கப்படவில்லை. சாலை, தண்ணீர் வசதிகள் இல்லை. பள்ளிக் கட்டிடங்களை சரி செய்யவில்லை. இதுபோன்று எதையும் செய்யாத ஆட்சி தமிழகத்தில் எதுக்கு இருக்கு என தெரியவில்லை.

கோவை அருகே நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதற்காக, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நடந்த கொடுமைகளை விட முக்கியம் தனது கட்சிக்காரர்களை பாதுகாக்கிறது என ஆட்சியில் இருக்கிறவர்கள் நினைக்கக்கூடிய அளவிலான ஆட்சி நடைபெறுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி சாப்பிடக்கூடிய நிலையில் இல்லாத சூழலை பார்க்கிறோம்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை 10 நிமிடத்தில் நிறைவேற்றி தந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இதற்காக ஒரு துறையை உருவாக்கி, அதனை முதல்வரின் நேரடி பார்வையில் வைத்து செயல்படுத்தி காட்டியவர். மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகள் அடுத்து வரும் திமுக ஆட்சியில் சரி செய்து தருவோம்.

விவசாயிகளை எதிர்த்து வரக்கூடிய சட்டங்களை ஆதரிக்கின்றனர். தூத்துக்குடியில் போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் கொல்லப்பட்டனர். ஆனால், இதனை டிவியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என முதல்வர் கூறுகிறார். சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்தனர். இதுகுறித்து கேட்டபோது, மூச்சுத்திணறலில் தந்தை, மகன் இறந்தனர் என முதல்வர் கூறுகிறார். இப்படி ஒரு ஆட்சி நடந்து வருகிறது.

அரசு கஜானா காலி. இவர்கள் சம்பாதிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். குளம், ஏரி தூர்வாருகிறோம் என்கின்றனர். எங்கும் தூர்வாருவது கிடையாது. கணக்கு மட்டும் எழுதுகின்றனர். சுய உதவிக்குழுக்கள் எதுவும் செயல்படவில்லை.

தான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக மோடி ஆட்சியில் தமிழகத்தை அடகு வைத்துவிட்டனர். அவர்கள் கேட்டால் தமிழகத்தின் உரிமைகள் அனைத்தையும் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கக்கூடிய ஆட்சி நடக்கிறது.

தொடர்ந்து அவர்கள் இந்தியை திணிக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்சி நமக்கு தேவையில்லை. இதனால், அதிமுகவை நிராகரிப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் இந்த ஆட்சி மீது குற்றப்பத்திரிகையை வைத்துள்ளார். எனவே, என்னுடன் சேர்ந்து அதிமுகவை நீங்களும் நிராகரிக்க வேண்டும். தேர்தல் அன்று திமுகவுக்கு வாக்களித்து இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும், என்றார்.

தொடர்ந்து இலுப்பையூரணி ஊராட்சி விஸ்வநாததாஸ் காலனியில் எம்.பி. நிதியில் இருந்து கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள ஜெகன், என்.ஆர்.கே.ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் முருகேசன், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சூர்யராஜ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தானம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ராஜிவ் நகரில் நடந்த கூட்டத்தின்போது, திமுக ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் பிரேமா தலைமையில் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் கனிமொழி எம்.பி. முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

SCROLL FOR NEXT