தமிழகம்

பழநி தைப்பூசவிழாவில் ஒரு நாளைக்கு 25000 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு: தேரோட்டத்தில் பங்கேற்க வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லை 

பி.டி.ரவிச்சந்திரன்

தைப்பூசவிழா நாட்களில் பழநி தண்டாயுதபாணிசுவாமி மலைக் கோயிலுக்குச் செல்ல ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் மூலம் அனுமதி வழங்கப்படவுள்ளது.

தைப்பூச தேரோட்டத்தில் பங்கேற்க வெளியூர் பக்தர்ளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூசத்திருவிழா ஜனவரி 22 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறவுள்ளது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜனவரி 28 ம் தேதி மாலை தேரோட்டம் நடைபெறவுள்ளது.

தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழநி நோக்கிச் சென்று சுவாமி தரிசனம் செய்வர்.

தற்போது கரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் பக்தர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கோயிலுக்கு வரும் நபர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்துவரவேண்டும். ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

கோயில் வளாகத்தில் உள்ள சிலைகளை தொடக்கூடாது. பஜனைக்குழு, இசைக்குழுவினர் பக்தி பாடல்கள் பாட அனமதியில்லை. மாற்றாக பதிவு செய்யப்பட்ட பக்தி இசை பாடல்களை ஒலிக்கலாம். பக்தர்கள் தேங்காய், பூ, பழம் ஆகியவற்றை கொண்டுவருவதை தவிர்க்கவேண்டும். கோயிலில் அங்கப்பிரதட்சணம், தரையில் விழுந்து வணங்குதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும்.

முடிகாணிக்கை செலுத்தும் இடங்களில் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவேண்டும். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிபெண்கள், குழந்தைகள் கோயிலுக்கு வருவதை தவிர்க்கவேண்டும். முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தைப்பூச தேரோட்டம் உள்ளூர் பக்தர்களுடன் மட்டுமே நடைபெறும். வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லை. எனவே தொலைக்காட்சி, சமூகவலைதளங்கள் மூலம் தேரோட்டத்தை ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடியைச் சேர்ந்த 5000 பக்தர்கள் மலைக்கோயிலில் ஒரு நாள் இரவு தங்குவது வழக்கம். இந்த முறை 500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவுள்ளது, என்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT