தமிழகம்

நாங்கள் 3 மாதத்தில் ஆட்சிக்கு வருவோம்; 10 ஆண்டுகளாக அதிமுக செய்த தவற்றை செய்ய மாட்டோம்: கனிமொழி எம்.பி.

எஸ்.கோமதி விநாயகம்

"நாங்கள் 3 மாதத்தில் ஆட்சிக்கு வருவோம். அப்போது நாங்கள் நடத்தும் கிராம சபை கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். அவர்கள் 10 ஆண்டுகள் செய்த தவறை எதையும் நாங்கள் செய்ய மாட்டோம்" என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

மேலும், கோவை அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்றவே அதிமுக அக்கறை காட்டுகிறது என கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டினார்.

கோவில்பட்டி அருகே கழுகுமலையில் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறும்போது, கோவை அருகே நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையவர்கள் பெரும்பாலானவர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள்.

அண்மையில் கைதானவர் கூட அதிமுக மாணவர் அணியில் பொறுப்பில் இருந்தவர். முதலில் கைது செய்யப்பட்டவர்களும் அதிமுகவில் பொறுப்பிலே உள்ளவர்கள் தான். தொடர்ந்து அந்த குற்றவாளிகளை காப்பாற்றுவதில் தான் அக்கறை காட்டி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைப்பதைப் பற்றி அக்கறை காட்டியது கிடையாது என்பது தான் உண்மை.

திமுக அங்கேயே போராட்டம் நடத்தியது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தினார். அதன் பின்னரே வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. முதலில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். 2 ஆண்டுகளுக்கு பின்னர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை வேகம் கொடுக்க வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை.

ஆட்சியில் 10 ஆண்டுகளாக இருப்பவர்கள் முதலில் தாங்கள் செய்த சாதனைகளை கூறட்டும். அதற்கு முன்னதாகவே நாங்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்டுள்ளோம். எங்களது பழைய தேர்தல் அறிக்கையில் கூட குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுகவினர் மீது போடப்பட்டுள்ள பல வழக்குகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதிவு செய்யப்பட்டவை. இதில் எந்த வழக்கும் நிரூபணமாகவில்லை.

பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பல குழப்பங்கள் உள்ளன. பயிர்க் காப்பீடு என்பது தனிப்பட்ட விவசாயிகளிடம் இருந்து பெறுகின்றனர். ஆனால், விவசாயிகள் பாதிக்கப்படும்போது, அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில்லை. அந்த பகுதியே பாதிக்கப்பட்டால் தான் பயிர் காப்பீடு வழங்க முடியும் என்கின்றனர். இவையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.

நாங்கள் 3 மாதத்தில் ஆட்சிக்கு வருவோம். அப்போது நாங்கள் நடத்தும் கிராம சபை கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். அவர்கள் 10 ஆண்டுகள் செய்த தவறை எதையும் நாங்கள் செய்ய மாட்டோம், என்றார் அவர்.

SCROLL FOR NEXT