‘பாஸ்டேக்’ அட்டைக்கான கால அவகாசம் நீட்டித்துள்ள போதிலும், சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ இல்லாதவர்களிடம் 2 மடங்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. மேலும், இருவழி பயணத்துக்கான சலுகை கட்டணம் மறுக்கப்படுவதால், கூடுதல்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் எளிதாக கடந்து செல்லகடந்த 2016 முதல் ‘பாஸ்டேக்’ என்ற மின்னணு கட்டண பரிமாற்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த ‘பாஸ்டேக்’குகள் சுங்கச்சாவடிகள் மற்றும் 30 ஆயிரம் விற்பனை மையங்களில் கிடைக்கின்றன.
இந்த திட்டத்துக்காக 27 வங்கிகளுடன் மத்திய அரசு ஒப்பந்தம்செய்துள்ளது. ‘பாஸ்டேக்’ நடைமுறை ஜன.1-ம் தேதி முதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, ‘பாஸ்டேக்’ அட்டைக்கான அவகாசம் வரும் பிப். 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ இல்லாமல் பயணம் செய்தால் 2 மடங்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக சரக்கு லாரிமற்றும் சொந்த வாகன ஓட்டிகள்சிலர் கூறும்போது, ‘‘பாஸ்டேக் வாங்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ‘பாஸ்டேக்’ தடத்தில் சென்றால் 2 மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல், பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ இல்லாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் இருவழி பயணத்துக்கான சலுகை மறுக்கப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது. மக்களின் பயணச் செலவும் அதிகரித்து விடு கிறது’’என்றனர்.