தமிழகம்

மினி கிளினிக்குகளில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை பணிநியமனம் செய்வதை கைவிட வேண்டும்: அரசு மருத்துவர்கள் போராட்டக் குழு வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மினி கிளினிக்குகளில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை பணிநியமனம் செய்வதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மினி கிளினிக்குகளில் பணி செய்ய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதாக அரசு அறிவித்துள்ளது. மருத்துவர்களுக்கு மாத ஊதியம்ரூ.60 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை நான்கு வருடங்களாக நிறைவேற்றப்படாமல், தொடர்ந்து போராடி வருகிறோம். இந்த நிலையில் இப்படி ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சுகாதாரத் துறையில் தமிழகம்முன்னோடி மாநிலமாக திகழ்வதாக முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சரும் பெருமையாக கூறி வருகிறார்கள். இந்த நிலையில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் நியமனம் என்பது, உண்மையில் மற்ற மாநிலங்களுக்கு மோசமான உதாரணமாகவே உள்ளது. மருத்துவர்களை தற்காலிகமாக நியமனம் செய்வது என்பது கேலிக்கூத்தாக உள்ளது.

ஏற்கெனவே நாம் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் பணியிடங்கள் வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளோம். இந்த நிலையில், ஒப்பந்தஅடிப்படையில் நியமிக்க வேண்டிய அவசியம் என்ன?

அரசின் கடமை

கரோனாவை எதிர்கொள்ள தமிழகத்தின் பலமே 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள்தான் என்பதை அரசு நன்றாகவே உணர்ந்துள்ளது. இந்த நிலையில் அரசின் இந்த அறிவிப்பு மருத்துவர்களுக்கு ஆத்திரமூட்டுவதாக உள்ளது. தமிழகம் நிரந்தரமாக சுகாதாரத்துடன் இருக்க மருத்துவர்களையும் நிரந்தரமாகவே நியமிப்பது தானே நியாயமாக இருக்கும். நிதிச்சுமையாக இருந்தாலும் மக்கள் உயிரை காப்பாற்றுவதே அரசின் கடமை.

எனவே மினிகிளினிக்குகள் மட்டுமன்றி அரசு மருத்துவர்களை எப்போதுமே நிரந்தர அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வேண்டும். அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT