செய்யாறு அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவியின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.
செய்யாறு அடுத்த தும்பை கிராமத்தை பூர்வீகமாக கொண்ட வர் நாராயணன். இவர், தற்போது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகளுக்கு வரும் 25-ம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், செய்யாறு அருகேயுள்ள முனுகப்பட்டு கிரா மத்தில் உள்ள பச்சையம்மன் கோயிலில் குலதெய்வத்துக்கு பொங்கல் வைத்து வழிபட் டுள்ளனர்.
குடும்பத்தினருடன் கிராமத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்தபோது, அருகே உள்ள விவசாயக் கிணற்றில் நேற்று முன்தினம் பிற்பகல் நாராயணன் குடும்பத்தினர் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது, கிணற்றின் படிக்கட்டில் அமர்ந்திருந்த நாராயணின் இளைய மகள் சுதா (19) என்பவர் தவறி தண்ணீரில் விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாது என்பதால், அருகே இருந்தவர்கள் கிணற்றில் குதித்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், கிணற்றில் தண்ணீர் அதிகம் இருந்ததால் அவரை மீட்க முடியவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கிய சுதாவை உயிரிழந்த நிலையில் மீட்டனர். இது தொடர்பாக செய்யாறு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
2-ம் ஆண்டு கல்லூரி மாணவி
இதற்கிடையில், சுதாவின் கண்களை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்படி, காஞ்சிபுரம் தனியார் கண் மருத்துவமனை குழுவினர் சுதாவின் கண்களை தானமாக நேற்று முன்தினம் இரவு பெற்றனர். உயிரிழந்த சுதா, பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.