தமிழகம்

கோவை மேற்கு மண்டலத்தில் சிறார்களுக்கு எதிராக அதிகரிக்கும் பாலியல் குற்றச் சம்பவங்கள்

டி.ஜி.ரகுபதி

மேற்கு மண்டலக் காவல்துறை எல்லைக்குட்பட்ட மாவட்டங்களில், சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 2020-ம் ஆண்டில் அதிகரித்துள்ளன.

சமீபகாலமாகத் தேசிய அளவில் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் ரீதியிலான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. பாலியல் ரீதியிலான குற்றச் சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பதாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்களும் தெரிவிக்கின்றன. பள்ளி, கல்லூரிகள், பணிபுரியும் இடம், வசிப்பிடம் அருகே, பயணிக்கும் வாகனம் என இட வேறுபாடு இன்றி, வயது வித்தியாசம் இன்றி, பாலியல் ரீதியிலான தாக்குதலுக்குப் பெண்கள் உள்ளாக்கப்படுகின்றனர். இதில் குறிப்பிட்ட சதவீதம் பேர் தெரிந்த நபர்களாலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்பது வேதனைக்குரியதாகும்.

மாறி வரும் பழக்கவழக்கம், ஒருவருடன் பழகும் அணுகுமுறையில் ஏற்படும் மாற்றம், செல்போன் பயன்பாடு அதிகரிப்பு, சமூக வலைதளங்களில் மூழ்கி முன்பின் தெரியாதவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல், திரைப்படங்களில் வரும் இளம்பருவக் காதல் காட்சிகள் போன்றவை இளம் பெண்கள், சிறார்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிக்க முக்கியக் காரணங்களாக சமூகச் செயற்பாட்டாளர்கள் தரப்பில் கூறப்படுகின்றன. இதில், கோவை மேற்கு மண்டலக் காவல்துறைக்குட்பட்ட மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது, 2020-ம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

18 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டால் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுகின்றனர். ''பாலியல் குற்றங்களுக்கு எதிராகத் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதால், பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றிக் காவல்துறையிடம் புகார் செய்கின்றனர். இதுவும் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஒரு காரணம்'' எனக் காவல்தறையினர் தரப்பில் கூறப்பட்டாலும், சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதை மறுக்க முடியாது.

வழக்கு விவரம்

காவல்துறையினரின் புள்ளிவிவரப்படி, கோவை மேற்கு மண்டலத்தில் 2020-ம் ஆண்டு கோவையில் 63, திருப்பூரில் 54, நீலகிரியில் 62, ஈரோட்டில் 81, சேலத்தில் 72, நாமக்கல்லில் 66, கிருஷ்ணகிரியில் 45, தருமபுரியில் 68 என மொத்தம் 511 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுவே, 2019-ம் ஆண்டு கோவையில் 53, திருப்பூரில் 47, நீலகிரியில் 31, ஈரோட்டில் 75, சேலத்தில் 70, நாமக்கல்லில் 46, கிருஷ்ணகிரியில் 68, தருமபுரியில் 53 என மொத்தம் 443 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

2020-ம் ஆண்டு கோவை மாநகரக் காவல்துறையில் 43 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு மண்டலத்தில் கிருஷ்ணகிரியைத் தவிர, மற்ற மாவட்டங்களில் போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, மலைப் பிரதேசமான நீலகிரியில் போக்சோ வழக்குகள் இரட்டிப்பாகி உள்ளன.

இதுகுறித்துச் சமூக செயற்பாட்டாளர்கள் கூறும்போது, ''சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க, பெற்றோர்களின் கண்காணிப்பு, அவர்களது அன்பான பழகும் முறை முக்கியமானதாகும். வழக்கமான நடைமுறையில் இருந்து சிறார்களுக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக அதுகுறித்து அவர்களிடம் தயக்கமின்றி விசாரிக்க வேண்டும். அதீத கண்டிப்பு, சிறார்களுக்குப் பயத்தை ஏற்படுத்தலாம். எனவே, பக்குவமாக, நண்பரைப் போல் பெற்றோர்கள் பழக வேண்டும்'' என்றனர்.

குற்றங்களைத் தடுக்க விழிப்புணர்வு

இதுபற்றிக் கோவை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இரா.சுந்தர் கூறும்போது, ''சிறார்கள் சார்ந்து பணிபுரிபவர்களுக்குத் திறன் வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பொதுமக்களிடமும், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் எச்சரிக்கை என்ற பெயரில், சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பது குறித்து எச்சரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நோட்டீஸ்கள் வழங்கப்படுகின்றன. தவிர, பாலியல் குற்றங்கள் என்றால் என்ன?, பாலியல் குற்றங்கள் தொடர்பாக யாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்பது குறித்தும் சிறார்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது'' என்றார்.

மாநகரக் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ''சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போக்சோ மட்டுமின்றி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் 106 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4 போக்சோ வழக்குகளுக்குத் தண்டனையும் பெற்றுத் தரப்பட்டுள்ளது'' என்றார்.

பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மகளிர் அமைப்பினர். | படம்: ஜெ.மனோகரன்.

டீன் ஏஜ் கவுன்சலிங்

மேற்கு மண்டலக் காவல்துறைத் தலைவர் (ஐஜி) கே.பெரியய்யா ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ''பாலியல் குற்றங்கள் தொடர்பாகப் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. காவல்துறையினர் மூலம் பள்ளி, கல்லூரிகளில் தவறான தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இளமைப் பருவத்தில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தவிர, வளரிளம் சிறார்களின் குறைகளைக் களைய, அந்தந்தப் பகுதி மகளிர் காவலர்கள் மூலம் டீன் ஏஜ் கவுன்சலிங்கும் அளிக்கப்படுகிறது. போக்சோ குற்றங்கள் அதிகரிப்பு எனக்கூற முடியாது. தொடர் விழிப்புணர்வால் பாதிக்கப்படுபவர்கள் தயங்காமல் காவல்துறையிடம் புகார் தெரிவிக்கின்றனர். 2020-ம் ஆண்டு 44 போக்சோ வழக்குகளில் தொடர்புடையவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது'' என்றார்.

SCROLL FOR NEXT