ராஜ்நிவாஸைச் சுற்றி மத்தியப் படையினரின் அணிவகுப்பு | படங்கள்: செ.ஞானபிரகாஷ் 
தமிழகம்

காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு: புதுச்சேரி ஆளுநர் மாளிகையைச் சுற்றி 3 அடுக்குப் பாதுகாப்பு

செ.ஞானபிரகாஷ்

காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் அறிவித்துள்ளதால், ஆளுநர் மாளிகையைச் சுற்றியுள்ள சாலைகளில் மூன்று அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றுக்குப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை இடுவதாகக் கூறி அதனைக் கண்டித்து காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகள் சார்பில் 8-ம் தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் போராட்டத்திற்குப் போட்டியாக, புதுவை மாநில பாஜக சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல்வர் நாராயணசாமி வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். காங்கிரஸ், பாஜக போட்டி போராட்டங்களால் புதுவை அரசியலில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே புதுவை காவல்துறை கேட்டுக்கொண்டதற்கிணங்க தெலங்கானா, கேரளா மாநிலங்களில் இருந்து 3 கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்புப் படை புதுவைக்கு வந்துள்ளது. கோரிமேட்டில் உள்ள காவலர் சமுதாய நலக்கூடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இன்று கரோனா பரிசோதனை நடந்தது.

இன்று மாலை ஒரு கம்பெனி படையினர் ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட பகுதிகளில் அணிவகுப்பு நடத்திப் பார்வையிட்டனர். அங்கு சென்ற ஆட்சியர் பூர்வா கார்க், அவர்களிடம் ஆலோசனை நடத்தினார். பாதுகாப்புப் படையினர் ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். தற்போது ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸைச் சுற்றி, சாலைகள் முழுவதும் 3 அடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டு முழுவதும் மூடப்பட்டுள்ளன.

இதையடுத்துக் காவல்துறை தலைமை அலுவலகத்தில் டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்ஸவா, ஆட்சியர் பூர்வா கார்க், ஏடிஜிபி ஆனந்த் மோகன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கூறும்போது, ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக ராஜ்நிவாஸ் எதிரே மறியல் போராட்டம் நடத்த காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினர் அனுமதி கோரியிருந்தனர்.

காவல்துறை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் விளக்கும் டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்ஸவா, ஆட்சியர் பூர்வா கார்க், ஏடிஜிபி ஆனந்த் மோகன்.

ஆளுநர் மாளிகை எதிரேயுள்ள பாரதி பூங்காவை நாளை (ஜன.7) முதல் மறு உத்தரவு வரும் வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தப் போராட்டத்துக்கும் ஆட்சியர் அனுமதி தேவை. கட்சியினர் தரப்பில் தந்த மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. கரோனா தொற்று காரணமாக விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக எந்தத் தனி நபர் மீதும் அவதூறான கருத்துகளைப் போராட்டக்காரர்கள் தெரிவிக்கக் கூடாது.

முக்கியமாக ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, தலைமைச் செயலகம், முதல்வர், அமைச்சர்களின் இல்லம் அரசு கோவிட் மருத்துவமனைகள் உள்ளிட்ட நகரப் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குப் போராட்டம் நடத்தத் தடை விதித்தும், நகரப் பகுதியில் கூடுவதைத் தடுக்கவும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இப்பகுதிகளில் ஐந்து பேருக்கு மேல் ஒன்றுகூடக் கூடாது. இப்பகுதிகளில் முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம், பேரணி, போராட்டம் நடத்துவது சட்ட விரோதமாகும். தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT