கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவி வருவதைத் தொடர்ந்து அண்டைய மாவட்டமான கன்னியாகுமரியில் தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
களியக்காவிளை, படந்தாலுமூடு சோதனை சாவடிகளில் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களிலும் பறவை காய்ச்சல் பரவியுள்ளது.
அங்கு பண்ணைகளில் உள்ள கோழி, வாத்துகள் அதிக அளவில் நோய்தாக்கி இறந்தன. இதை கால்நடைத்துறையினர் ஆய்வு செய்தபோது பறவை காய்ச்சலுக்கான பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் பண்ணைகளில் வளர்க்கப்பட்ட வாத்து உள்ளிட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் அழிக்கப்பட்டன.
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியதை தொடர்ந்து கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லை பகுதிகளிலும் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களை எல்லை பகுதியான களியக்காவிளை, மற்றும் படந்தாலுமூடு சோதனை சாவடிகளில் கால்நடைத்துறையினர் தீவிரமாக கண்காணிதது வருகின்றனர்.
கேரளாவில் இருந்து கோழி, மற்றும் பறவைகளுக்கான தீவனங்களையோ, கோழிகளையோ கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வரும் வாகனங்களை களியக்காவிளையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும் கேரளாவில் கோழி, மற்றும் வாத்து பண்ணைகள், கிளி, புறா போன்ற செல்ல பறவை வளர்ப்பு பண்ணைகளில் பணிபுரிந்தோரும் குமரி மாவட்டத்திற்குள் வருவதை தடுக்கும் வகையில் வாகனங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு சோதனை சாவடிகளில் டயர்கள், மற்றும் வெளிப்புற பகுதிகளில் கிருமி நாசினி தெளித்த பின்பே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.
மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள கோழி, காடை, மற்றும் பறவை பண்ணைகளில் கால்நடைத்துறையினர் நாளை முதல் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.