தமிழகம்

பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: தென்காசி புளியரை சோதனைச் சாவடியில் ஆட்சியர் ஆய்வு

த.அசோக் குமார்

பறவைக் காய்ச்சல் நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக புளியரையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு செய்தார்.

கேரள மாநிலத்தில் வாத்துகளுக்குப் பறவைக் காய்ச்சல் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் கேரள எல்லையையொட்டி அமைந்துள்ள தென்காசி மாவட்டம் புளியரையில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் முகாம் அமைத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த முகாமை தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வைத் தொடர்ந்து ஆட்சியர் கூறும்போது, “பறவைக் காய்ச்சலானது ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசத்தைத் தொடர்ந்து கேரளாவில் கோட்டயம் மற்றும் ஆலப்புழா பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், தென்காசி மாவட்ட எல்லையான புளியரையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர் மற்றும் கிருமிநாசினி தெளிப்பவர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

பறவைக் காய்ச்சல் தடுப்பு சோதனைச்சாவடியில் கேராளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு கோழிகள், வாத்துகள், முட்டைகள், கோழித்தீவனங்கள், கோழி இறைச்சிகள், மற்றும் கோழிக் கழிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டு உடனடியாக திருப்பி கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. மேலும், கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளித்து தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் 223 பதிவு செய்யப்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த கோழிப்பண்ணைகளின் உரிமையாளர்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பண்ணைகளில் கோழிகளுக்கு ஏற்படும் அசாதாரண இறப்புகள் மற்றும் நோய்த்தொற்றுகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வனத்துறையின் மூலம் பறவைகள் கூடும் நீர்நிலையங்கள், பறவைகள் சரணலாயங்களை தொடர்ந்து கண்காணிக்கவும், அங்கு வரும் பறவைகளுக்கு நோய் அறிகுறி தென்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ஷீலா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் முகமது காலித், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் வெங்கட்ராமன், செங்கோட்டை வட்டாட்சியர் ரோஷன் பேகம், செங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT