கரோனா கால நிவாரணமாக மாதம் ரூ.7500 மத்திய அரசும், ரூ.5000 மாநில அரசும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி பழைய பேருந்து நிலையம் அருகில் சிஐடியு சார்பில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தியதை வாபஸ் பெற வேண்டும்.
கரோனா கால நிவாரணமாக மாதம் ரூ.7500 மத்திய அரசும், ரூ.5000 மாநில அரசும் வழங்க வேண்டும். அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்க வேண்டும்.
நலவாரிய பதிவு, புதுப்பித்தல், ஓய்வூதியம், பணப்பயன்கள் கேட்பு மனுக்களின் ஆன்லைன் விண்ணப்பத்தை முறைப்படுத்தி, விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்காசி மாவட்டத்துக்கு தனியாக தொழிலாளர் நலவாரிய அலுவலகம் வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள் வன்னியபெருமாள், லெனின்குமார், மணிகண்டன், ஆரியமுல்லை, மகாவிஷ்ணு, லெட்சுமி, சின்னசாமி, ரத்தினம், அயுப்கான், ஆயிஷா, கிருஷ்ணன், ராஜசேகர், கசமுத்து, பரமசிவன், கற்பகவல்லி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தடையை மீறி மறியலில் ஈடுபட்ட 42 பெண்கள் உட்பட 115 பேரை தென்காசி போலீஸார் கைது செய்தனர்.