இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தளி ராமச்சந்திரன் மீதுள்ள கொலை முயற்சி வழக்கு விசாரணைக்குத் தடை கேட்டும், சேலம் நீதிமன்றத்தில் வழக்கை மாற்றக் கோரியும் பாதிக்கப்பட்டவர் வழக்குத் தொடர்ந்தார். உயர் நீதிமன்றம் இதன் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக 2006-11 மற்றும் 2011-16ம் ஆண்டுகளில் பதவி வகித்தவர் தளி ராமச்சந்திரன். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
2006-ம் ஆண்டு தேர்தலில், சுயேச்சையாகத் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து அதிமுகவுக்குத் தாவிய நாகராஜன் ரெட்டி என்பவரைக் கொல்ல முயற்சி செய்ததாக, தளி ராமச்சந்திரன், நாகராஜ், முனிராஜ் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு, கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணைக்கு ஆஜராக நாகராஜனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், தளி ராமச்சந்திரன் ஆதரவாளர்களிடம் இருந்து தனக்கு மிரட்டல்கள் வருவதால் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள கொலை முயற்சி வழக்கின் விசாரணையை, சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும், கிருஷ்ணகிரி நீதிமன்றம், இந்த வழக்கை விசாரிக்கத் தடை விதிக்கக் கோரியும், நாகராஜன் ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்னாள் எம்எல்ஏ தளி ராமச்சந்திரனுக்கு எதிராக கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கை சேலம் மாவட்டத்திற்கு மாற்றுவது குறித்து தளி காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.