தனியார் ஆய்வகங்களில் கரோனா தொற்று பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.1,200 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் முதல் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த நேரத்தில் சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வகத்தில் மட்டுமே தினமும் 10 நபர்கள் வரைகரோனா தொற்றுக்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.
தொற்று அதிகரிக்கத் தொடங்கியதால், பல்வேறு அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. தற்போதைய நிலையில், 67 அரசு மருத்துவமனைகள், 174 தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை 1.45 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் சராசரியாக 70 ஆயிரம் பரிசோதனைகள் நடைபெறுகின்றன.
அரசுக்கு கோரிக்கை
அரசு மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை இலவசமாகசெய்யப்படுகிறது. தனியாரில்பரிசோதனைக்கு ரூ.3 ஆயிரம்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் கரோனா தொற்று பரிசோதனை கட்டணம் அதிகமாக உள்ளது. கட்டணத்தை குறைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தனியாரில் செய்யப்படும் கரோனா தொற்று பரிசோதனை கட்டணத்தை குறைத்து ஆணையிட்டுள்ளார். அதில், “தனியாரில் கரோனா தொற்று பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்துரூ.1,200 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. வீடுகள் மற்றும் விடுதிகளுக்குச் சென்று மாதிரிகளை சேகரித்தால் கூடுதலாக ரூ.300 வசூலித்துக் கொள்ளலாம்.
முதலமைச்சரின் விரிவானமருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பரிசோதனை செய்பவர்களுக்கு ரூ.2,500-ல் இருந்து ரூ.800 ஆக நிர்ணயிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
வீடுகள் மற்றும் விடுதிகளுக்குச் சென்று மாதிரிகளை சேகரித்தால் கூடுதலாக ரூ.300 வசூலித்துக் கொள்ளலாம்.