தமிழகம்

ராமதீர்த்தம் கோயில் சிலை உடைப்பு விவகாரம்: சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது ஆந்திர அரசு

என். மகேஷ்குமார்

ராமதீர்த்தம் கோதண்டராமர் கோயில் சிலை உடைப்பு விவகாரம்குறித்து சிஐடி விசாரணைக்கு ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக இந்து கோயில்களில் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் நாசவேலையில் ஈடுபட்டு வருகின்றனர். விஜயநகரம் மாவட்டம் ராமதீர்த்தம் கோதண்டராமர் கோயிலில் உள்ள ராமர் சிலையை மர்ம கும்பல் கடந்த மாதம் 26-ம்தேதி உடைத்து நாசப்படுத்தியது. ராமதீர்த்தம் விவகாரத்தை அரசியல் கட்சியினர் கையிலெடுத்து நேரில் சென்று பார்வையிட்டதால் அங்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இந்நிலையில், நேற்று ஆந்திரமாநில பாஜக தலைவர் சோமுவீரராஜு மற்றும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் விசாகப்பட்டினத்திலிருந்து ராமதீர்த்தம் கோதண்டராமர் கோயிலை பார்வையிடச் சென்றனர். ஏற்கெனவே ராமதீர்த்தம் பகுதியில் தடை உத்தரவுஅமலில் இருப்பதால், தர்ணா, ஆர்ப்பாட்டம், கண்டன ஊர்வலம்போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு வந்த பாஜக தலைவர் சோமு வீரராஜு மற்றும் அவருடன் வந்த பாஜகவினர் கைது செய்யப்பட்டு நெல்லமர்லா போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ராமதீர்த்தம் விவகாரம் குறித்து நேற்று அமராவதியில் ஆந்திர இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் எல்லம்பள்ளி நிவாச ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘இந்து கோயில்கள் மீது மர்மகும்பல் நாசவேலையில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம். இது குறித்து சிஐடி விசாரணை நடத்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

ராமதீர்த்தம் கோதண்டராமர் கோயிலை முற்றிலுமாக மராமத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வரைபடமும் தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும். சிறு கோயில்களில் உள்ள சிலைகளை நாசப்படுத்தினாலும் அந்தப் பழியைஅரசு மீது திணிப்பது தவறாகும்.

இதுவரை 88 கோயில்களில் மட்டுமே நாசவேலை நடைபெற்றுள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினர் 127 கோயில்கள் என தவறாக கூறுகின்றனர். இது குறித்து 169 பேரை கைது செய்துள்ளோம். மாநிலம் முழுவதும் 57,584 கோயில்கள் உள்ளன. இதில் முக்கியமான 3 ஆயிரம் கோயில்களில் மட்டும் 39,076 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன’’ என்றார்.

மேலும் 3 சிலைகள் உடைப்பு

கோயில்கள் மற்றும் சிலைகள் மீது தொடர் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், நேற்றுமுன் தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் பிரகாசம் மாவட்டம் பழைய சிங்கராய கொண்டா பகுதியில் உள்ள வராக நரசிம்மர் கோயிலுக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளையில் உள்ள நரசிம்மர், ராஜலட்சுமி மற்றும் கருடன் சிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் சிலைகளின் கை, கால்கள், மூக்கு போன்றவை உடைக்கப்பட்டன.

இதுகுறித்து போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் புகார் செய்ததின்பேரில் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT