தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த குழு பேச்சுவார்த்தை போக்குவரத்து துறை செயலாளர் சி.சமயமூர்த்தி தலைமையில் சென்னை குரோம்பேட்டை மாநகர போக்குவரத்துக் கழக பயற்சி மைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 67 தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடக்கம்: 67 தொழிற்சங்கங்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான,14-வது ஊதிய ஒப்பந்த முதல்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில், நேற்று தொடங்கியது. இதில் 67 தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு அரசு அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான, 14-வது ஊதியஒப்பந்த முதல்கட்ட பேச்சுவார்த்தை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் நேற்று காலை 11:30 மணிக்கு தொடங்கியது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறைச் செயலர் சி.சமயமூர்த்தி, ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினர் - செயலர் கு.இளங்கோவன், நிர்வாகத் தரப்புக் குழு, துணைக் குழு உறுப்பினர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதில் 8 அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும், 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் ஊதியம், பல்வேறு படிகள், பணி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்துவிவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

பின்னர் அரசு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலர்வி.தயானந்தன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையின்போது வழக்கமாக தொழிற்சங்கங்கள் சார்பில் 2 பிரதிநிதிகள் கலந்துகொள்வது வழக்கம். இம்முறை கரோனா அச்சுறுத்தலால் சமூக இடை வெளி தேவைப்படுவதால் தொழிற் சங்கங்கள் சார்பில் ஒவ்வொரு பிரதிநிதி மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். மற்றொரு பிரதிநிதி கூட்டம் நடைபெறும் அறையின் மேல்தளத்தில் அமர்ந்து காணொலி மூலம் பேச்சுவார்த்தையை காண லாம் என தெரிவித்திருந்தனர்.

ஆனால் பேச்சுவார்த்தையை காணொலி மூலம் எங்களுக்கு காண்பிக்க எந்த ஒரு ஏற்பாடும் செய்யப்படவில்லை. இதுகுறித்து கேட்டால் பேச்சுவார்த்தை குறித்த விஷயங்கள் வெளியே பரவிவிடும். எனவே அனுமதிக்கவில்லை என கூறுகிறார்கள். கடந்த ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையின்போது 47 தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன. இந்த முறை 67 தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன. மாநில அளவில் உள்ள தொழிற்சங்கங்கள் சார்பில் பங்கேற்க வேண்டிய கூட்டத்தில் மாவட்ட அளவிலான தொழிற்சங்கங்களை அனுமதித்ததே இதற்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT