கேரளாவில் பரவிவரும் பறவைக் காய்ச்சல் காரணமாக இரு மாநில எல்லையான கோவை வாளையாறு மற்றும் உடுமலை ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதி களில் தடுப்பு நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் மர்மமான முறையில் இறந்த வாத்துகளை சோதனையிட்டபோது பறவைக் காய்ச்சல் உள்ளது கண்டறியப்பட்டது. இதனால், கேரளாவில் இருந்து கோழி, வாத்துகள் மற்றும் முட்டை ஆகியவற்றை தமிழகத்துக்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் 6 மாவட்டங்களின் எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி, கோவை–கேரள எல்லையான வாளையாறு, வேலந்தாளம், ஆனைகட்டி, பொள்ளாச்சி முத்துக்கவுண்டனூர், வடக்குகாடு, மீனாட்சிபுரம், செம்மனாம்பதி, கோபாலபுரம் உள்ளிட்ட 12 சோதனைச்சாவடிகளில், மாவட்ட கால்நடை நோய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
வாளையாறு எல்லையில் கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பெருமாள்சாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறும்போது, "கேரளாவில் இருந்து வரும் சரக்கு வாகனங்களைக் கண்காணித்து, கிருமிநாசினி தெளித்து வருகிறோம். கோழி, வாத்துகளை தமிழகம் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளதால், தடையை மீறி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கோழி, வாத்துகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் எல்லைகளில் நிறுத்தப்பட்டு, தமிழக அரசு வழங்கிய அனுமதிச் சான்று உள்ளதா என சோதனையிட்ட பின்னரே கேரளா செல்ல அனுமதிக்கப்படுகின்றன. கோவையில் மொத்தம் 1,256 பிராய்லர் கோழி வளர்ப்புப் பண்ணைகள் உள்ளன. அந்தந்தப் பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவர்கள், பண்ணைகளில் ஏதேனும் சந்தேகத்துக்கிடமான உயிரிழப்புகள் இருக்கிறதா என்பதை கண்காணிப்பார்கள்" என்றார்.
ஒன்பதாறு சோதனைச்சாவடி
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள தமிழக- கேரள எல்லையான ஒன்பதாறு சோதனைச் சாவடியில், கால்நடைத்துறை சார்பில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று தொடங்கியது. கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநர் பொன்.பாரிவேந்தன், இணை இயக்குநர் கவுசல்யா, உதவி இயக்குநர் வே.ஜெயராம் ஆகியோர் முகாமை பார்வையிட்டு, ஆலோசனை வழங்கினர்.