இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர் கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி நாகை மீனவர்கள் 2-வது நாளாக நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நம்பியார் நகரைச் சேர்ந்த விஜயவேல் உட்பட 9 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் பிடித்துச் சென்று, யாழ்ப் பாணம் சிறையில் அடைத்துள்ளனர்.
இதேபோல நாகை பகுதியி லிருந்து கடந்த செப்டம்பர் 21-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற ஒரு படகையும், 15 மீனவர்களையும், அக்டோபர் 2-ம் தேதி நம்பியார் நகரைச் சேர்ந்த ஒரு படகையும், 7 மீனவர்களையும், அக்டோபர் 8-ம் தேதி அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 2 படகுகளையும், 19 மீனவர் களையும் இலங்கை கடற்படையி னர் பிடித்துச் சென்றுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த செயலைக் கண்டித்தும், அனைத்து மீனவர்களையும் படகு களுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் நாகை நம்பியார் நகர் மீனவர்கள் நேற்று முன்தினம் (அக்டோபர் 14) முதல் வேலைநிறுத்தத்தை தொடங்கினர். தொடர்ந்து, நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், சுமார் 200 ஃபைபர், 75 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.
இதற்கிடையே, நேற்று நம்பியார் நகர் மீனவர்கள் ஊர்க் கூட்டம் நடத்தினர். அதில், வேலைநிறுத்தத்தைத் தொடருவது என்றும், நாளை (அக்டோபர் 17) கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதம் மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.
நமக்கு நாமே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திமுக பொரு ளாளர் மு.க.ஸ்டாலின், நாளை நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது, உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மீனவர்களை அவர் சந்திப்பார் எனக் கூறப்படுகிறது.