பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக எல்லையான கம்பம்மெட்டு பகுதியில் கேரளாவில்இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. 
தமிழகம்

பறவைக் காய்ச்சல் பரவுவதால் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கோழி, வாத்துகள் கொண்டுவரத்  தடை

என்.கணேஷ்ராஜ்

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவிவருவதால் அங்கிருந்து தேனி மாவட்டம் வழியாக கோழி, வாத்துகள் கொண்டுவர தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே தமிழகத்திற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

கேரளாவில் பறவைக் காய்ச்சல் வெகுவாய்ப் பரவி வருகிறது. எனவே அம்மாநிலஅரசு இதனை பேரிடராக அறிவித்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .

பறவைக் காய்ச்சல் தமிழகத்திற்கு பரவாமல் தடுக்க தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையில் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது .

இதில் கேரள எல்லையான முந்தல், கம்பம் மெட்டு, லோயர் கேம்ப் ஆகிய சோதனை சாவடிகளில் வருவாய், காவல், சுகாதாரம் மற்றும் கால்நடைப்பராமரிப்பு உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து குழு ஏற்படுத்தி கண்காணிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கேரளாவிலிருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோழி, வாத்து, முட்டை ஆகியவற்றை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து கொண்டு சென்ற கோழி, முட்டைகளை தேனி மாவட்டத்திற்கு திரும்ப கொண்டு வரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் 1.5 லட்சம் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (புதன்) கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதர்களுக்கு காய்ச்சல், புளுகாய்ச்சல், தலைவலி, நிமோனியா, கண் எரிச்சல், கண் சிவத்தல், தொண்டைப்புண் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பண்ணைகளில் கோழி இறப்பு இருந்தால் உடன் தெரிவிக்கும்படி கால்நடை பராமரிப்புத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT