மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.
மக்களவை திமுக உறுப்பினரும் அக்கட்சியின் மாநில மகளிரணிச் செயலாளருமான கனிமொழி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இன்று (ஜன.05) அவர் தன்னுடைய 53-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு, அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கனிமொழி, தன் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக தலைவரும் தன்னுடைய சகோதரருமான மு.க.ஸ்டாலினிடம், சென்னையில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் உடனிருந்தார்.
கனிமொழி, இந்தி மொழி திணிப்புக்கு எதிராகவும், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் நலன், மாற்றுப்பாலினத்தவர்கள் உரிமைகள் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வருகிறார்.