தமிழகம்

தேனி மாவட்டத்தில் சாயப்பட்டறைகளை மூடக் கோரி வழக்கு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கி.மகாராஜன்

சாயப்பட்டறைகளை மூடக் கோரிய வழக்கில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேனியைச் சேர்ந்த ராஜா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''தேனி ஆண்டிபட்டி தாலுக்கா ஜக்கம்பட்டியில் பத்துக்கும் மேற்பட்ட சிறு சிறு சாயப்பட்டறைகள் செயல்படுகின்றன. சாயப்பட்டறைகளில் இருந்து வெளிவரும் கழிவு நீர் ஆண்டிபட்டி பிரதான கால்வாயில் கலக்கிறது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இது தொடர்பாகப் பல முறை உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, ஜக்கம்பட்டியில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகளை உடனடியாக மூடுவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, மனு தொடர்பாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

SCROLL FOR NEXT