தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகளுக்கான மருத்துவப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்களைத் தேர்வு செய்வதில் தற்போதைய நிலையே தொடர உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை வளர்நகர் பகுதியைச் சேர்ந்த வைரம் சந்தோஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தமிழ்நாட்டில் 2000 மினி கிளினிக்குகளைத் தொடங்குவதற்காக அரசாணை எண் 530 2020 டிசம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த மினி கிளினிக்குகளில் பணிபுரியும் செவிலியருக்குச் சம்பளமாக 14,000 ரூபாயும், மருத்துவ உதவியாளர்களுக்கு 6,000 ரூபாயும் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடங்கப்படவுள்ள 2000 மினி கிளினிக்களுக்காக 585 மருத்துவ உதவியாளர்களும், 1415 செவிலியர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இதற்காக சுகாதாரத்துறை இயக்குனர் 2020 டிசம்பர் 15ஆம் தேதி பணியாளர் நியமனம் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதன்படி தனியார் ஏஜென்சி மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் ஏஜென்சி மூலம் தேர்வு செய்யப்படுவதால் முன்பதிவு, இன சுழற்சி முறை, வேலைவாய்ப்பு பதிவு ஆகியவை முறையாகப் பின்பற்றப்படுவதில்லை.
கரோனா நோய்தொற்று நேரங்களில் அனுபவமில்லாத செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஏஜென்சி மூலம் தேர்வு தேர்வு செய்யப்படுவது சரியானதாக இருக்க முடியாது. எனவே, சுகாதாரத்துறை இயக்குனர் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்களை ஏஜென்சி முறையில் தேர்வு செய்ய 2020 டிசம்பர் 15-ம் தேதி வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
தமிழகத்தில் திறக்கப்படும் மினி கிளினிக்குகளுக்குத் தற்காலிகமாக மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்கள் தேர்வு செய்வது ஏன்? என்பதற்குத் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத் தரப்பில் பதில்மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.
இதையேற்ற நீதிபதிகள் வழக்கை (திங்கட்கிழமைக்கு) ஜனவரி 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தும், மினி கிளினிக்குகளுக்கான செவிலியர், மருத்துவப்பணியாளர் தேர்வில் தற்போதைய நிலையே தொடரவும் உத்தரவிட்டனர்.