புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே புள்ளான்விடுதியில் வெடிவைத்து கோயில் தகர்த்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புள்ளான்விடுதி மாரியம்மன் கோயில் அருகே ஓம் சக்தி கோயில் உள்ளது. இக்கோயிலில் இன்று (ஜன. 5) சிறப்பு வழிபாடு நடத்துவதற்காக பந்தல் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று இருந்தன. இந்த வழிபாட்டில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இன்று அதிகாலையில் மர்ம நபர்கள் பூட்டிய கோயிலுக்குள் நாட்டு வெடிகளை போட்டு வெடிக்க செய்துள்ளனர்.
இதனால் கோயிலின் மேற்கூரையான சிமென்ட் சீட்டுகள், சுவர் அனைத்தும் உடைந்து தகர்ந்து உள்ளன. சாமி படங்களும் உடைந்து நொறுங்கி உள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
இந்த சம்பவம் குறித்து வடகாடு போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார்? எதற்காக செய்தார்கள்? என்கிற விவரம் உடனடியாக தெரியவரவில்லை.
இதனால் வெடித்து சிதறிய பேப்பர்களை சேகரித்து அந்த பகுதியில் வெடி தயாரிப்பில் ஈடுபடுவது யார்? இந்த வெடிகளை வாங்கியது யார்? போன்ற விவரங்களை சேகரிக்கும் பணியில் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக சேர்ந்து ஆண்டுதோறும் தைப்பொங்கலின்போது ஒன்றாகக்கூடி பொங்கலிட்டு வழிபட்டு வருவதால் இந்த ஊருக்கு தமிழக அரசு மத நல்லிணக்கத்துக்கான விருதை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.