தமிழகம்

டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலி

செய்திப்பிரிவு

சென்னை தனியார் மருத்துவ மனையில் டெங்கு காய்ச்சலால் 3 வயது குழந்தை உயிரிழந்தது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் காயார் கிராமத்தை சேர்ந்தவர் பிரான்ஸ். மளிகை கடை நடத்தும் இவரது 3 வயது மகள் ஜூலியட். காய்ச்சல் காரணமாக கடந்த 16-ம் தேதி ஜூலியட்டை தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவப் பரிசோதனையில் ஜூலியட்டுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 17-ம் தேதி மேல் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜூலியட்டை சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் குழுவினர் குழந்தையின் டெங்கு காய்ச்சலை குணப்படுத்த சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை குழந்தை உயிரிழந்தது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “திருப்போரூர் பகுதியில் மருத்துவ முகாம் நடத்திய போது, இந்த குழந்தை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல் கிடைத்தது. குழந்தையின் இறப்பு குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அலுவலரிடம் கேட்டிருக்கிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT