தமிழகம்

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மீது தாக்குதல்: போலீஸார் மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் வேல்முருகன் மனு

செய்திப்பிரிவு

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள பன்னாட்டு குளிர்பான ஆலைகளை மூட வலியுறுத்தி நேற்று முன்தினம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் கட்சியின் பொதுச் செயலாளர் காவேரி உள்ளிட்ட 10 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த தாக்குதலைக் கண்டித்து கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு டிஜிபியை சந்தித்து புகார் செய்யுமாறு போலீஸார் அறிவுறுத்தினர்.

அதன்படி, வேல்முருகன் தலைமையிலான குழுவினர் டிஜிபியை நேற்று சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில், ‘அமைதி வழியில் போராடிய கட்சியினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கங்கைகொண் டான் காவல் ஆய்வாளர் சிவமுருகன் உள்ளிட்ட காவல் துறையினர் மீது வழக்கு பதிவு செய்து பணிநீக்கம் செய்ய வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.

பின்னர் நிருபர்களிடம் பேசிய வேல்முருகன், “நாங்கள் கொடுத்த ஆதாரங்களை பார்த்த டிஜிபி அசோக்குமார், உடனே நடவடிக்கை எடுப் பதாக தெரிவித்துள்ளார். அக்டோபர் 30-ம் தேதி கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம். இந்த சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்துள்ளோம். நீதி மன்றத்திலும் வழக்கு தொட ருவோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT