தமிழகத்தில் நேற்றுமுதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பணம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்புப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் அய்யப்பன்தாங்கல் பகுதி நியாயவிலைக் கடை முன்பு அதிமுக பேனர்களை வைத்து அக்கட்சியினர் பொங்கல் பரிசுகளை வழங்கினர்.
இதையடுத்து ஆலந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் தா.மோ.அன்பரசன் தலைமையில் அங்குவந்த திமுகவினர், அதிமுக பேனரை வைத்து பொங்கல் தொகுப்பு பரிசுகளை வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து மாங்காடு போலீஸார், இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருந்தும் அதிமுகவினர் பேனரை எடுக்காததால், திமுகவினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்து பேனர் அகற்றப்பட்டது.
பொங்கல் தொகுப்புகளை அதிமுக பேனர்களை வைத்து அக்கட்சியினர் கொடுப்பது தொடர்ந்தால் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப் போவதாகவும் திமுகவினர் தெரிவித்தனர்.
இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே சேலையூர் ரங்கநாதன் தெருவில் உள்ள நியாயவிலைக் கடையில் பேனர் மற்றும் கொடி கம்பம் வைப்பதில் அதிமுக, திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. சேலையூர் போலீஸார் அங்கு நிலைமையை சரிசெய்ததையடுத்து பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு விநியோகிக்கப்பட்டது.