தமிழகம்

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் கோரி வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச் செயலாளரான ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஏ.ஜி.மவுரியா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் பேட்டரி டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. அந்த சின்னத்தை முன்னிலைப்படுத்தியே எங்களது கட்சியும் மக்களை சந்தித்து வந்தது. இந்நிலையில், எதிர்வரவுள்ள பொதுத் தேர்தல்களில் புதுச்சேரிக்கு மட்டும் மக்கள் நீதி மய்யம்
கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் இந்த சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்படாமல் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்திலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரிடார்ச் லைட் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்த சின்னத்தை எம்ஜிஆர் மக்கள் கட்சி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.ஸ்ரீதர் ஆஜராகி, ‘‘தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவுப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு குறைந்தபட்சம் 2 தேர்தல்களில் பொதுச் சின்னம் ஒதுக்க வேண்டும்.

அந்த வகையில் கடந்த மக்களவை தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது.’’ என வாதிட்டார்.

இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் தேவை என தேர்தல் ஆணையம் தரப்பில் கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், இது
தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.2-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT