புதுச்சேரி முதல்வரின் பொய்யான பேச்சால் காங்கிரஸ் வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது என, புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் எம்.அருள்முருகன் கூறியுள்ளார்.
காரைக்காலில் இன்று (ஜன.4) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரி மாநிலத்தில் பாஜக பெரும் வளர்ச்சி பெற்று வருகிறது. இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் தாமாக முன்வந்து கட்சியில் இணைந்து வருகின்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி. மாநிலத்தில் முதல்வர் வி.நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லாவற்றுக்கும் தேவையின்றி துணைநிலை ஆளுநரைக் காரணம் காட்டி, பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க முயல்கிறார்.
பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி, கிராமப்புற மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படும். சாலை மேம்பாடு, மருத்துவ வசதியை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு, ஊழலற்ற ஆட்சி, அரசு திட்டங்கள் முறையாக மக்களைச் சென்றடைவது உள்ளிட்டவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
புதுச்சேரி மாநிலத்தைத் தமிழகத்தோடு இணைக்க மத்திய அரசு முயன்று வருவதாகத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி பொய்யான கருத்தைக் கூறி வருகிறார். புதுச்சேரிக்கு வந்த உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, எந்தவொரு மாநிலத்துடனும் புதுச்சேரி இணைக்கப்படாது என்று தெளிவாகக் கூறி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இனிமேல் முதல்வர் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். புதுச்சேரி முதல்வரின் செயல்பாடுகளாலும், பொய்யான பேச்சுகளாலும் காங்கிரஸ் வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது".
இவ்வாறு அருள்முருகன் தெரிவித்தார்.