கரோனா தடுப்பூசி வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் அத்தியாவசியப் பணிகளில் வழக்கறிஞர்களையும் சேர்க்க வேண்டுமென தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், மத்திய அரசு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள், பார் கவுன்சில் ஆகியோருக்கு சங்கத்தின் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான எஸ்.பிரபாகரன் கடிதம் எழுதியுள்ளார்.
கரோனா தடுப்பு விதிகள் காரணமாக நீதிமன்றங்கள் பெருமளவில் காணொலி மூலமாக நடத்தப்படுவதாகவும், மீண்டும் அனைத்து நீதிமன்றங்களும் செயல்படத் தொடங்கும்போது வழக்கறிஞர்களைப் பாதுகாக்கும் வகையில் கரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
அரசு அறிவித்துள்ள தடுப்பூசிக்கான அத்தியாவசியப் பணிகளில் வழக்கறிஞர்களையும் சேர்க்க வேண்டுமெனவும், தவறினால் நீதிமன்றத்தை நாடி, தீர்வு காண நேரிடும் எனவும் தனது கடிதத்தில் தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரான எஸ்.பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.