ஜிப்மர் மருத்துவமனையில் போதுமான எண்ணிக்கையில் செவிலியர்களைப் பணியமர்த்தக் கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு, ரவிக்குமார் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார். மொத்தமுள்ள 2,137 படுக்கைகளுக்கு 745 செவிலியர்கள் மட்டுமே உள்ளதால் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் இன்று (ஜன.04) அனுப்பியுள்ள கடிதம்:
"புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனை ஆகும். அது இந்தியாவின் 5 தென் மாநிலங்களின் மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது. ஜிப்மர் மருத்துவமனையில் 2,137 படுக்கைகள் உள்ளன. பெரும்பாலும் அவை நிரம்பி உள்ளன. ஆனால், இங்கே போதுமான அளவு செவிலியர்கள் இல்லை.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 2,362 படுக்கைகள் உள்ளன. அங்கு 4,759 செவிலியர்கள் பணியில் உள்ளனர். ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 960 படுக்கைகள் மட்டுமே உள்ளன, அங்கு 1,327 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், 2,137 படுக்கைகள் கொண்ட ஜிப்மர் மருத்துவமனையில் 745 செவிலியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
அதுபோலவே, சீனியர் நர்ஸிங் ஆபீசர் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. இதனால் அவர்களுக்குப் பணிச்சுமை அதிகரிக்கிறது. அதன் காரணமாக போதுமான அளவில் நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, உடனடியாகப் போதுமான எண்ணிக்கையில் ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர்களை பணியமர்த்த வேண்டும்".
இவ்வாறு விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.